தியேட்டர் உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்

தினமலர்  தினமலர்
தியேட்டர் உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்

தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். நாளை(வெள்ளி) முதல் தியேட்டர்கள் இயங்கும் என அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

ஸ்டிரைக்
கேளிக்கை வரி முற்றிலும் நீக்கம், லைசென்ஸ் புதுப்பித்தல் மூன்றாண்டுகளுக்கு ஒரு மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தியேட்டர் உரிமையாளர்கள், கடந்த மார்ச் 16-ம் தேதி படங்களை வெளியிடாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வந்தனர். சென்னையில் உள்ள தியேட்டர்கள் மட்டும் இந்தப்போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

முதல்வருடன் சந்திப்பு
இப்பிரச்னை தொடர்பாக இரு தினங்களுக்கு முன்னர் முதல்வர் பழனிசாமியை தியேட்டர் நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது இரண்டுநாளில் தனது கருத்தை சொல்வதாக முதல்வர் தெரிவித்ததாக ரோகினி பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையிலான நிர்வாகிகள் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் அரசு அதிகாரிகளை சந்தித்து பேசினார்கள்.

வாபஸ்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபிராமிராமநாதன், எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, கே.சி.வீரமணி உறுதியளித்துள்ளனர். இதனால் நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம். நாளை(மார்ச் 23) முதல் வழக்கம் போல் தியேட்டர்கள் இயங்கும் என தெரிவித்தார்.

புதுப்படங்கள் வெளியீடு இல்லை
தியேட்டர் உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ் பெற்றாலும் புதிய படங்கள் வெளியீடு இருக்காது. ஏற்கனவே வெளியான படங்கள் மற்றும் பிறமொழி படங்கள், டப்பிங் படங்கள் மற்றும் பழைய எம்ஜிஆரின் படங்கள் வெளியாக உள்ளன.

மூலக்கதை