குளத்தை அழித்து ரோடு அமைப்பு அழிப்பதில் ஆர்வம்! இயற்கை ஆர்வலர்கள் பேரதிர்ச்சி

தினமலர்  தினமலர்
குளத்தை அழித்து ரோடு அமைப்பு அழிப்பதில் ஆர்வம்! இயற்கை ஆர்வலர்கள் பேரதிர்ச்சி

திருப்பூர்:திருப்பூர், மண்ணரை குளத்துக்கு செல்லும் நீர் வழித்தடத்தை மறித்தும், வாய்க்காலை உடைத்தும், குளத்தை அழித்துதனியார் ஒருவர் ரோடு அமைத்து வருகின்றனர்.
திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில், 35 ஏக்கர் பரப்பளவில் மண்ணரை குளம் அமைந்துள்ளது. நகருக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த குளத்துக்கு, மழைக்காலங்களில் நீர் வரத்து உள்ளது. நொய்யல் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள, அணைக்காடு தடுப்பணையிலிருந்து, 4.5 கி.மீ., துாரம் வழங்கு வாய்க்கால் மூலம் நீர் வரத்து உள்ளது.
குளத்தின் சுற்றுப்பகுதியிலுள்ள, குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாக, இந்த குளம் விளங்குகிறது. குளத்துக்கு தண்ணீர் செல்ல முடியாத அளவுக்கு, குளம், வழங்கு வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தும், புதர் மண்டியும் காணப்பட்டது.
பொதுப்பணித்துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, சேவை அமைப்பு மூலம், குளத்தின் நீர் வழித்தடம் புதுப்பிக்கப்பட்டது. ஆண்டு முழுவதும் நீர் இருப்பு உள்ள, குளத்தை அழிக்கும் வகையில், தற்போது, குளத்திற்கு மறு பகுதியில் உள்ள, தனியார் சிலர் செயல்பட்டு வருகின்றனர். வழங்கு வாய்க்காலில் இருந்து, குளத்துக்கு தண்ணீர் செல்வதை தடுக்க, கருமாரம்பாளையம் பகுதியில், வாய்க்காலை உடைத்து, ஆற்றுக்குள் சேரும் வகையில், மாற்றப்பட்டுள்ளது. நீர் செல்லும் வழித்தடத்தை மறித்து, பெரிய அளவில் மண் கொட்டி, ரோடு அமைக்கப்படுகிறது. குளத்தின் கரைகளை அழித்து, ரோடு அமைக்கப்பட்டு, குளம் முழுவதும் அழிக்கப்படுகிறது.
பொதுமக்கள் கூறியதாவது :திருப்பூருக்கு மிக அருகில் உள்ள குளத்தை, தனியார் சிலர் அழித்து வருகின்றனர். ஊத்துக்குளி ரோட்டிலிருந்து, குளத்தை அழித்து தங்களுக்கு புதிதாக ரோடு அமைத்து வருகின்றனர். வழங்கு வாய்க்கால் உடைக்கப்பட்டுள்ளது. குளத்திற்குள் நீர் வரும் வழித்தடத்தை தடுத்தால், மழை காலங்களில் வரும் வெள்ள நீர் ஊத்துக்குளி ரோட்டுக்கு வரும்.
வழித்தடமே இல்லாமல், தனியார் தங்களுக்கு சாதகமாக ரோடு அமைத்து வருவதை உடனடியாக அதிகாரிகள் தடுத்து நிறுத்துவதோடு, குளத்தை அழித்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, பொதுமக்கள் கூறினர்.பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'உடனடியாக ஆய்வு செய்து, சம்மந்தப்பட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

மூலக்கதை