மயிலை கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழா... துவக்கம்! நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலம்

தினமலர்  தினமலர்
மயிலை கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழா... துவக்கம்! நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலம்

சென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி மாதப்பெருவிழா, நேற்று அதிகாலை, கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சிவ நாமத்தை உச்சரித்தனர்.

தொண்டை மண்டல சிவன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில். ஆண்டுதோறும், பங்குனி மாதத்தில் நடக்கும், 10 நாள் பெருவிழா, விடையாற்றி கலை விழாவாக நடத்தப்படுகிறது. இந்த விழாவில், சென்னை, புறநகர் மட்டுமின்றி வெளி ஊர்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து, ஈஸ்வரனை தரிசனம் செய்வர்.

கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலை, 4:30 மணிக்கு, கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், சிங்காரவேலர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து, காலை, 5:15 மணிக்கு கொடியேற்றம் துவக்கியது. இந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சிவ நாமத்தை உச்சரித்து தரிசித்தனர்.

விழாவின், இரண்டாம் நாளான இன்று காலை, 8:30 மணிக்கு, சூரிய பிரபையும்; இரவு, 9:00 மணிக்கு, சந்திர பிரபை காட்சியும் நடைபெறுகிறது. நாளை, அதிகார நந்தி காட்சி, திருஞான சம்பந்தர் முலைப்பால் விழா நடக்கிறது.

கருட தரிசனத்தால் பக்தர்கள் பரவசம்:
கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவின் போது, ஆண்டுதோறும் தேர் உற்சவம், அறுபத்து மூவர் விழா ஆகியவை நடைபெறும் நாட்களின் போது, கருடன் வானத்தில் வட்டமடித்து, தரிசனம் கொடுப்பது வழக்கத்தில் உள்ளது. இந்நிலையில், நேற்று கொடியேற்றத்தின்போது, கருடன் ஒன்று, கொடிமரத்தை சுற்றி வந்து, இறக்கைகளை விரித்து தாழப் பறந்து காட்சி தந்தது. இந்த நிகழ்வு, பக்தர்களை பரவசப்படுத்தியால் சிவா கோஷம் விண்ணை பிளந்தது.



கண்காணிப்பு ஏற்பாடுகள் தீவிரம்:
கபாலீஸ்வரர் கோவில் பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான அதிகார நந்தி சேவை, தேர், அறுபத்து மூவர் விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். அவர்களை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு அளிக்கவும், போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மாடவீதிகளை சுற்றி கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. நான்கு வீதிகளிலும், 25க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்படுகின்றன. முக்கிய விழாக்களில், 50க்கும் மேற்பட்ட போலீசார், மாறுவேடங்களில் பக்தர்களோடு கலந்து, கண்காணிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், நகை பறிப்பு, பிக்பாக்கெட் திருடர்களின் படங்கள், மாடவீதிகளை சுற்றி ஒட்ட ஏற்பாடு செய்துள்ளதாகவும், போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை