தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் சிம்பு பேச்சு

தினமலர்  தினமலர்
தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் சிம்பு பேச்சு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கும் வேலை நிறுத்தத்திற்கு அனைத்து தயாரிப்பாளர்களும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இதுவரை விஷாலுடன் மோதலில் ஈடுபட்டு வந்த சீனியர் தயாரிப்பாளர்கள் கூட இந்த ஸ்டிரைக் தேவையான ஒன்று, இதன் மூலம் பல தயாரிப்பாளர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற எண்ணத்தில் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

நேற்று தயாரிப்பாளர் சங்கத்தினர் இயக்குனர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் உள்ளிட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அந்த சிறப்புக் கூட்டத்தில் நடிகர் சிம்பு வந்து கலந்து கொண்டார். 'அஅஅ' படத்தின் விவகாரத்தில் சிம்புக்கும், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே மோதல் இருக்கிறது. இருந்தாலும், சிம்பு நேற்று கலந்து கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருகிறது.

அது மட்டுமல்ல, சிம்பு நேற்று வெளிப்படையாகப் பேசிய பேச்சுக்கும் தயாரிப்பாளர்களிடம் ஆதரவு இருந்ததாம். சிம்பு பேசும் போது, “நடிகர்கள் எத்தனை கோடி சம்பளம் வாங்குகிறார்கள் என்பது பற்றி பேசுவது தேவையற்றது. நான் இலவசமாகக் கூட நடித்துக் கொடுப்பேன். நடிகர்களுக்கும் அவர்களது படங்களின் வசூல் உண்மை நிலவரம் தெரிய வேண்டும். அதை தியேட்டர்காரர்கள் முறையாகத் தெரிவிக்க வேண்டும். அதைப் பொறுத்து நடிகர்கள் அவர்களது சம்பளத்தை நிர்ணயம் செய்வார்கள். நான் படப்பிடிப்பிற்குத் தாமதமாக வந்தாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே எனது வேலையை முடித்துக் கொடுத்துவிடுவேன்,” என சிம்பு பேசியிருக்கிறார்.

சிம்பு கூட்டத்திற்கு வந்து கலந்து கொண்டதும், அவர் பேசிய பேச்சுகளும் கருத்தில் கொள்ளப்படும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்களின் இந்த ஒற்றுமை தற்போது சிலருக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது என்றும் சொல்கிறார்கள்.

மூலக்கதை