மாநிலங்களவை வேட்பாளர்களில் 87 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாநிலங்களவை வேட்பாளர்களில் 87 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்

புதுடெல்லி: மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களில் 87 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஐக்கிய ஜனதாதள கட்சியின் மகேந்திர பிரசாத் வசம் ரூ. 4 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக சொத்துக்கள் உள்ளது தெரியவந்துள்ளது. 16 மாநிலங்களில் 58 காலியிடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது.

இதில் போட்டியிடும் 64 பேரில் 63 பேரின் பிரமாண பத்திரங்களை ஆராய்ந்து, ஜனநாயக சீர்திருத்தத்துக்கான தேர்தல் கண்காணிப்புக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 63 பேரில் 55 பேர் கோடீஸ்வரர்கள்.

இவர்களின் சராசரி சொத்து மதிப்பு  ரூ. 122 கோடி.   இதில் 26 பேர் பா. ஜ. கட்சியையும், 10 பேர் காங்கிரஸ் கட்சியையும், 3 பேர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியையும், 2 பேர் ஐக்கிய ஜனதாதள கட்சியையும் சேர்ந்தவர்கள்.



அதிகபட்சமாக ஐக்கிய ஜனதாதள கட்சியின் மகேந்திர பிரசாத் ரூ. 4,078 கோடி சொத்துக்களும், குறைந்தபட்சமாக பிஜூ ஜனதா தள கட்சியின் அச்சுதானந்தா ரூ. 4. 96 லட்சம் சொத்துக்களையும் கொண்டுள்ளனர்.
மேலும், சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடும் ஜெயாபச்சனுக்கு ரூ. 1,001 கோடி சொத்துக்களும், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் பி. எம். பரூக்குக்கு ரூ. 766 கோடி சொத்துக்களும், காங்கிரஸ் கட்சி சார்பில் மே. வங்கத்தில் போட்டியிடும் அபிஷேக் மனு சிங்விக்கு ரூ. 649 கோடி சொத்துக்களும் உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை