நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கண்டு மத்திய அரசு ஒளிந்து ஓடுவது ஏன்? சந்திரபாபு நாயுடு கேள்வி

தினகரன்  தினகரன்

அமராவதி: மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ள முடியாமல் மத்திய அரசு தொடர்ந்து ஒளிந்து ஓடுவது ஏன் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டத்தில் வீடியோ கான்பிரன்ஸிங் முறையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தோம். இதைத்தவிர வேறு எதுவும் அவர்களிடம் கேட்கவில்லை. மத்திய அரசின் பாராமுகத்துக்கு  எதிர்ப்பு தெரிவித்து இரு அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்து இருக்கிறோம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறோம். ஆனால், மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் ஏன் பிடிவாதமாக இருக்கிறது. இந்தப் பிடிவாதத்துக்கு என்ன காரணம் இருக்கிறது.அதுமட்டுமல்லாமல் மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள முடியாமல் மத்திய அரசு தொடர்ந்து ஒளிந்து ஓடுவது ஏன் என்பதும் தெரியவில்லை. இது அரசியல் தற்கொலையாகும். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அதிகாரம் கொடுக்காமல் மறுப்பதற்கு என்ன காரணமாக இருக்க முடியும். மத்திய அரசின் பிடிவாதப் போக்கை மக்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபின், 20 ஆண்டுகள் பின்னோக்கி வளர்ச்சியில் நாங்கள் சென்றுவிட்டோம். இந்த இடைவெளியை நிரப்ப மத்திய அரசு நமக்கு ஏராளமான உதவிகள் செய்ய வேண்டும். ஆனால், இதை மிகவும் அற்பமாக மத்திய அரசு நினைக்கிறது. ஆந்திர மாநிலத்தின் நலனுக்காக எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் ஓங்கி குரல்கொடுக்க வேண்டும், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தையும் நிறைவேற்ற வேண்டும்.’’இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

மூலக்கதை