ஸ்டிரைக்கை மீறி 'காலா'வை வெளியிட கலகம் செய்வது யார் ?

தினமலர்  தினமலர்
ஸ்டிரைக்கை மீறி காலாவை வெளியிட கலகம் செய்வது யார் ?

தமிழ் சினிமா உலகத்தில் இப்படி ஒரு ஒற்றுமையை திரையுலகம் இதுவரை கண்டிருக்காது என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நேற்று தெரிவித்தார். விஷாலை இதுவரை எதிர்த்து வந்த சிம்பு, சேரன் உள்ளிட்டவர்கள் கூட நேற்று நடந்த தயாரிப்பாளர் சங்க கூட்டுக் குழு கூட்டத்தில் இந்த ஸ்டிரைக் மூலம் எடுக்க வேண்டிய நல்ல தீர்வுகளை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்கள். அனைத்து தயாரிப்பாளர்களும், தியேட்டர்களுக்கு மக்கள் அதிகம் வந்து படம் பார்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஆனால், நேற்று நடந்த கூட்டத்தில் 'காலா' படத்தை திட்டமிட்டபடி வெளியிட வேண்டும் என அப்படத்தின் தயாரிப்பு நிர்வாகி ஒருவர் கூட்டத்தில் பேசி சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார். ஸ்டிரைக் பற்றியும், மற்ற தயாரிப்பாளர்கள் பற்றியும் எங்களுக்குக் கவலையில்லை.

நாங்கள் அமெரிக்கா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பல இடங்களில் தியேட்டர்களை புக் செய்துவிட்டோம். அதனால், எங்களுக்கு 'காலா'வை திட்டமிட்டபடி வெளியிட வேண்டும் என பேசியிருக்கிறார். அவருடைய பேச்சைக் கேட்டு கூட்டத்திற்கு வந்த தயாரிப்பாளர்கள் பலரும் ஆவேசம் அடைந்திருக்கிறார்கள்.

மார்ச் மாதத்திலும், ஏப்ரல் மாதம் 20ம் தேதி வரையிலும் ஏற்கெனவே வெளியிட திட்டமிடப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் அந்த நிர்வாகியின் பேச்சைக் கேட்டு கோபம் அடைந்திருக்கிறார்கள். யார் எப்படி போனாலும் பரவாயில்லை எங்கள் படம் வெளியாக வேண்டும் என்ற ரீதியில் அவர் பேசியதற்கு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

'காலா' படத்தை ஸ்டிரைக்கை மீறி வெளியிட வேண்டும் என சிலர் கலகம் செய்து வருவதாக பலரும் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஒட்டு மொத்த தயாரிப்பாளர்களும் ஒற்றுமையாக இருக்கும் போது 'காலா' பட வெளியீடு சம்பந்தமாக ரஜினிகாந்த் என்ன முடிவெடுத்திருக்கிறார் என்றும், ஸ்டிரைக் பற்றிய அவரது முடிவையும் கேட்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

திரையுலக ஒற்றுமையை மீறி 'காலா' படத்தை வெளியிட ரஜினிகாந்த் சம்மதிப்பாரா ?, அல்லது சிறிய பட்ஜெட் படங்களைக் காப்பாற்ற நினைக்கும் தயாரிப்பாளர் சங்க முயற்சிகளுக்கு எதிராக செயல்படுவாரா என்பது விரைவில் தெரியவரும்.

மூலக்கதை