மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் தீவிரம் அடையாறு ஆற்றில் சுற்று சுவர் அமைக்க ஆய்வு பணிக்கு 4 குழுக்கள் அமைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் தீவிரம் அடையாறு ஆற்றில் சுற்று சுவர் அமைக்க ஆய்வு பணிக்கு 4 குழுக்கள் அமைப்பு

சென்னை: அடையாறு ஆற்றில் சுற்று சுவர் அமைக்கும் பணிக்காக எல்லை வரையறையை முடிவு செய்வதற்கு 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டது. இதில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

பல்லாயிரக்கணக்கானோர் தங்களது உடைமைகளை இழந்து தவித்தனர். குறிப்பாக, சைதாப்பேட்டை, கிண்டி உள்பட கரையோரம் வசித்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, கரையோரங்களை சுற்றி சுவர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, கூவம், அடையாறு உள்ளிட்ட கரையோரங்களில் சுற்று சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 19 கி. மீ கொண்ட கூவம் ஆற்றில் ரூ. 48 கோடியில் சுற்றுசுவர் அமைக்க மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டது.

ஆக்கிரமிப்புகளை அகற்றி எல்லை வரையறை பணிகளை மேற்கொள்ளாததால் கூவம் கரையோரம் சுற்று சுவர் அமைக்கும் பணிகள் 3. 2 கி. மீ தூரத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அடையாறு கரையோரம் சுற்று சுவர் அமைக்கும் பணியை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான மதிப்பீடுகளை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த சூழலில், ஆக்கிரமிப்புகளை அகற்றி எல்லை வரையறை பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்பணிக்காக, சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை கொண்ட ஊழியர்களை உள்ளடக்கிய 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் அடையாறு ஆற்றில் சுற்று சுவர் அமைப்பதற்கான ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆய்வு பணிகள், திட்ட மதிப்பீடு தயாரிப்பு பணிகள் முடிந்தவுடன் டெண்டர் விடப்பட்டு சுற்று சுவர் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறியதாவது:அடையாறு ஆற்றில் சுற்று சுவர் அமைக்கும் பணிக்காக 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் அடையாறு கரையோரங்களில் ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படும்.

இந்த பணிகள் அனைத்தையும் முடித்து டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

.

மூலக்கதை