தமிழகம் முழுவதும் புதிதாக 21 ஆற்றுமணல் குவாரிகளுக்கு அனுமதி பெற்றும் டெண்டர் விடுவதில் தாமதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகம் முழுவதும் புதிதாக 21 ஆற்றுமணல் குவாரிகளுக்கு அனுமதி பெற்றும் டெண்டர் விடுவதில் தாமதம்

சென்னை: டெண்டர் விடுவதில் பொதுப்பணித்துறை அலட்சியம் காட்டி வருவதால் 21 ஆற்று மணல் குவாரிகளுக்கு அனுமதி பெற்றும்  திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 8 மணல் குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் லோடு மணல் மட்டுமே கிடைக்கிறது.

மாநிலம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் லோடு தேவைப்படுவதால் கட்டுமான பணிகள் முற்றிலுமாக முடங்கி போய் உள்ளது. இதனால், லட்சக்கணக்கானோர் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மணல் தட்டுப்பாட்டை போக்க புதிய குவாரிகளை திறக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை அனுமதிக்க வேண்டும் என்றும் கட்டுமான சங்கத்தினர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதையேற்று மணல் தட்டுப்பாட்டை போக்க, புதிதாக குவாரிகளை திறக்கவும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை பொதுப்பணித்துறை மூலம் விற்பனை செய்யவும் தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி தமிழகம் முழுவதும் 70 புதிய குவாரிகளை திறக்க திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக தற்போது புதிதாக 21 குவாரிகளை திறக்க சுற்றுச்சூழல் ஆணையத்தில் மணல் குவாரிகளின் செயல்பாடு இயக்குனரகம் அனுமதி வாங்கியுள்ளது.

இந்த நிலையில் முதற்கட்டமாக 11 குவாரிகளில் மணல் எடுத்து யார்டிற்கு கொண்டு ெசல்வதற்கும், அங்கிருந்து லாரியில் மணல் ஏற்றுவதற்காக ெபாதுப்பணித்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.

இதற்காக, ரூ. 70 லட்சம் என்ற மதிப்பில் நிர்ணயம் செய்து பொதுப்பணித்துறை டெண்டர் கோரியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தொகை மிகவும் குறைவாக இருப்பதாக கூறி டெண்டர் எடுக்க பலர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. ஒரு சில கான்ட்ராக்டர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

அவர்கள் ஒப்பந்தப்புள்ளியை விட அதிகளவில் விலை நிர்ணயித்துள்ளனர். இதனால், பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் இறுதி செய்யாமல் கிடப்பில் போட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், அந்த குவாரிகளை திறக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், மீண்டும் குவாரிகளில் மணல் அள்ள மறு டெண்டர் விடவும் பொதுப்பணித்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்த குவாரிகளை உடனடியாக திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அனுமதி வாங்கியுள்ள மேலும், புதிய 10 குவாரிகளுக்கு மணல் அள்ள டெண்டர் விட பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.

இந்த குவாரிகளுக்கு அதே விலை நிர்ணயிக்கும் பட்சத்தில் கான்ட்ராக்டர்கள் டெண்டர் எடுப்பதில் ஆர்வம் காட்டுவார்களா என்பது ெதரியவில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

.

மூலக்கதை