அரசின் பல்வேறு சேவைகளுக்கு 'பிளாக்செயின்' பாதுகாப்பு வசதி

தினமலர்  தினமலர்
அரசின் பல்வேறு சேவைகளுக்கு பிளாக்செயின் பாதுகாப்பு வசதி

புதுடில்லி: 'நில ஆவணங்கள், ரேஷன், மருத்துவ ஆவணங்கள் உட்பட, மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு சேவைகளுக்கு, 'பிளாக்செயின்' என்ற புதிய பாதுகாப்பு வசதிகள் அதிகம் உடைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்' என, 'நிடி ஆயோக்' பரிந்துரைத்துள்ளது. இதற்கான விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

அரசின் பல்வேறு சேவைகள், 'டிஜிட்டல்' மயமாகி வருகின்றன. ஆன்லைன் மூலம் சேவைகளை பெறும் வசதி அதிகரித்து வருகிறது. இந்த முறைகள் பாதுகாப்பானவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், 'பிளாக்செயின்' எனப்படும் பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய புதிய தொழில்நுட்பம், பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த தொழில்நுட்பம், 'என்கிரிப்ஷன்' எனப்படும் ரகசிய குறியீட்டு எண் அடிப்படையில் இயங்குவதால், இதில் உள்ள தகவல்களை பார்க்க முடியும்; ஆனால், அதை திருத்தம் செய்யவோ, திருடவோ முடியாது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக, நிடி ஆயோக், தனியாக ஒரு குழுவை கடந்தாண்டு டிசம்பரில் அமைத்தது. இந்த மாத இறுதியில் ஆய்வு முடிந்து, அந்தக் குழு, தன் அறிக்கையை அளிக்க உள்ளது. எந்தெந்த துறைகளில், சேவைகளில், இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என்பது குறித்து, நிடி ஆயோக்கின் குழு ஆய்வு செய்து வருகிறது.

'முதல் கட்டமாக, நில ஆவணங்கள், ரேஷன் தகவல்கள் மற்றும் மருத்துவ சேவை ஆவணங்கள் ஆகியவற்றில் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்' என, இந்தக் குழு கூறியுள்ளது. அடுத்த மாத துவக்கத்தில் இதற்கான விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

மூலக்கதை