நான்காவது முறையாக அதிபரானார் புடின்

தினமலர்  தினமலர்
நான்காவது முறையாக அதிபரானார் புடின்

மாஸ்கோ: ரஷ்ய அதிபராக, விளாடிமிர் புடின், 65, நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில், 76 சதவீத ஓட்டுகள் பெற்று, அவர் வென்றார். ரஷ்ய அதிபர் பதவிக்கான தேர்தல், சமீபத்தில் நடந்தது. அதில், மூன்று முறை அதிபராக இருந்த, விளாடிமிர் புடினை எதிர்த்து, பலர் போட்டியிட்டனர். பல்வேறு சலுகைகள், குழந்தைகளை கவரும் நிகழ்ச்சிகளுடன் நடந்த இந்தத் தேர்தலில், 67 சதவீதம் பேர் ஓட்டளித்தனர். இதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், 76 சதவீத ஓட்டுகளைப் பெற்று, நான்காவது முறையாக, ரஷ்ய அதிபரானார், விளாடிமிர் புடின். அடுத்த, ஆறு ஆண்டுகள் அவர் இந்தப் பதவியில் இருப்பார். கடந்த, 2000ம் ஆண்டில், முதல் முறையாக அதிபரானார். மீண்டும், 2004ல், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரஷ்ய சட்டத்தின்படி, ஒருவர், தொடர்ந்து இரு முறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது. அதனால், 2008ல், பிரதமரானார். இதற்கிடையில், அதிபரின் பதவிக்காலம், ஆறு ஆண்டுகளாக மாற்றப்பட்டது. அதன்படி, 2012ல் நடந்த தேர்தலில், மூன்றாவது முறையாக அதிபரானார்.இரண்டு முறைக்கு மேல் அதிபராக முடியாது என்ற சட்டம், சீனாவில் திருத்தப்பட்டது. இதையடுத்து, நிரந்தர அதிபராகும் வாய்ப்பு, அந்த நாட்டு அதிபர், ஜி ஜின்பிங்குக்கு கிடைத்துள்ளது.'அதுபோல, ரஷ்யாவிலும் சட்டம் கொண்டு வரப்படுமா' என்ற கேள்விக்கு, ''நான் என்ன, 100 வயது வரையா, இந்தப் பதவியில் இருக்கப் போகிறேன்,'' என, புடின் பதிலளித்தார்.அவருக்கு, சீன அதிபர், ஜி ஜின்பிங், லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலா அதிபர், நிகோலஸ் மடுரோ உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை