தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் சார்பில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் சார்பில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

 புதுடெல்லி: மத்திய பாஜ கூட்டணி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர 3 நோட்டீஸ் கொடுத்துள்ளது. இதற்கு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்தகுமார் நாடாளுமன்றத்துக்கு வெளியே தெரிவித்தார்.

இருப்பினும் எதிர்கட்சிகள் தொடர் அமளி காரணமாக மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற மற்றும் ஆந்திர சட்டமன்ற தேர்தலின்போது ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசமும், பா. ஜவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணிக்கு கணிசமான வெற்றியும் கிடைத்தது.

எனினும், தேர்தலுக்கு பிறகு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட தொடங்கியது. ஆந்திர மாநிலம் ஆந்திரா, தெலுங்கானா என 2 ஆக பிரிக்கப்பட்ட பிறகு தலைநகர் ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்துக்கு சென்றுவிட்டது.

இதனால் புதிய தலைநகரை நிர்மாணிக்கவேண்டிய கட்டாயத்துக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு தள்ளப்பட்டார். மேலும் ஆந்திராவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது.



இதனால் தனது மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவேண்டும் என்றும் புதிய தலைநகரான அமராவதிவை கட்டுவதற்கு கூடுதல் நிதி வழங்கவேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை, ஆனால் சிறப்பு நிதி வழங்க தடையில்லை என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

இருப்பினும் கடந்த 4 பட்ஜெட்டில் சிறப்பு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த தெலுங்கு தேசம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கடந்த வாரம் விலகியது.

அதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவையிலிருந்த இரண்டு அமைச்சர்களும் பதவி விலகினர். இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருகின்றன.

இதற்காக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் தெலுங்கு தேசம் சார்பில் 2 நோட்டீஸ்கள், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் ஒரு நோட்டீஸ்  கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

முன்னதாக, மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தத் தீர்மானம் கொண்டு வர முயற்சி நடந்தபோது அவையில் கூச்சல், குழப்பம் நிலவியதால் அது கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. முன்னதாக அவைக்கு வெளியே நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்தகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

எதிர்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார். மக்களவை தொடங்கியவுடன் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷம் எழுப்ப தொடங்கினர்.



திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது. மக்களவையில் இப்போது 539 எம். பி. க்கள் உள்ளனர்.

இதில் ஆளும் பாஜகவுக்கு மட்டும் 274 எம். பி. க்கள் உள்ளனர். இது பெரும்பான்மைக்குத் தேவையான  270 எம். பி. க்களைவிட 4 அதிகமாகும்.

பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், அகாலி தளம், லோக் ஜனசக்தி, மக்கள் ஜனநாயக கட்சி, சிவசேனா போன்ற கட்சிகள் உள்ளன. இதில் சிவசேனா நடுநிலை வகிக்கப்போவதாக இன்று அறிவித்துள்ளது.

இருப்பினும் மற்ற கட்சிகள் நிச்சயம் ஆதரவு அளிக்கும். இது தவிர மேலும் சில சிறிய கட்சிகளும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும்.

அதிமுகவும் ஆதரவு அளிக்கும் எனவே, நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைவது நிச்சயம். எனினும், தொடக்கத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாஜக, இடைத்தேர்தல் தோல்விகளால் 10  எம். பி. க்களை இழந்தது.

இப்போது, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் இணைந்திருப்பது, மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளநிலையில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

.

மூலக்கதை