வங்கி கடன் மோசடி நபர்கள் வெளிநாடு தப்பிப்பதை தடுக்க மத்திய அரசு புதிய திட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வங்கி கடன் மோசடி நபர்கள் வெளிநாடு தப்பிப்பதை தடுக்க மத்திய அரசு புதிய திட்டம்

புதுடெல்லி: பிரபல தொழிலதிபர்கள், விஜய் மல்லையா, நிரவ் மோடி, அவரது உறவினர் மெகல் சோக்சி போன்றோர் வங்கி களில் கடன் வாங்கி, பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளும் நடந்து வருகின்றன.

அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றதால், அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க முடியவில்லை. மோசடி செய்பவர்கள், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. வங்கிகளில், 50 கோடிரூபாய்க்கு மேல் கடன் வாங்கும்போது, அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் தங்களுடைய பாஸ்போர்ட் விபரங்களை அளிக்க வேண்டும் என, இம்மாத துவக்கத்தில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையில், மோசடி செய்து வெளிநாடு தப்பிச் செல்வோரின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்யும் வகையில், புதிய மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின்படி, 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பாக்கி வைத்துள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

அவர்களுடைய அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய, இந்த மசோதா வகை செய்கிறது.

இந்நிலையில் பொருளாதார மோசடி செய்பவர்கள்,வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க, நிறுவனங்களின் இயக்குனர்கள் பாஸ்போர்ட் விபரங்கள் தாக்கல் செய்வதை கட்டாயமாக்க, மத்திய அரசின் நிறுவனங்கள் விவகாரத் துறை திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனத்தின் இயக்குனர்களுக்கும், டி. ஐ. என். , எனப்படும், இயக்குனர் அடையாள எண் வழங்கப்படுகிறது.

இதற்காக விண்ணப்பிக்கும்போது, தங்களுடைய பாஸ்போர்ட் விபரங்களையும் அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும். பாஸ்போர்ட் இல்லாதவர்கள், அதற்கான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

இதன் மூலம், அவர்களுடைய பாஸ்போர்ட் எண்ணைக் கொண்டு, மோசடி செய்து பின் வெளிநாடு தப்பி செல்ல முயல்வதை தடுக்க முடியும் என, நிறுவனங்கள் விவகாரத்துறை நம்புகிறது.

.

மூலக்கதை