ம.பி. அமைச்சர் மருமகள் தற்கொலை குறித்து விசாரணை முதல்வர் சவுகான் உறுதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ம.பி. அமைச்சர் மருமகள் தற்கொலை குறித்து விசாரணை முதல்வர் சவுகான் உறுதி

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டத்துறை அமைச்சரின் மருமகள் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் கூறியுள்ளார்.

மத்திய பிரதேச சட்டம் மற்றும் சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருப்பவர் ராம்பால் சிங். இவரது மகன் கிரிஜேஷ் சில மாதங்களுக்கு முன் போபாலில் உள்ள ஆரிய சமாஜ கோவிலில் வைத்து ப்ரீத்தி ரகுவன்ஷி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் பிரீத்தி, ரைசன் மாவட்டத்தின் உதய்புராவில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் கிரிஜேஷூக்கு வேறு ஒரு பெண்ணுடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையறிந்தது முதலே பிரீத்தி மிகவும் சோகமாக காணப்பட்டார்.

கணவர் 2-வது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததால்  மனமுடைந்த ப்ரீத்தி நேற்று முன்தினம் அதிகாலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது இறப்புக்குமுன் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்த ப்ரீத்தி, அதில் யாரையும் குற்றம் சாட்டவில்லை.

அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனைக்குப்பின் அவரது உடலை பெற்றுக்கொள்ள மறுத்த உறவினர்கள், ப்ரீத்தியின் உடலுக்கு கிரிஜேஷ்தான் இந்து முறைப்படி இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உதய்புரா மற்றும் ரைசன் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அங்கு பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மந்திரி ராம்பால் சிங்கின் மருமகள் தற்கொலை குறித்து உரிய  விசாரணை நடத்தப்படும் என முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் செய்தியாளர்களிடம் கூறினார்.

.

மூலக்கதை