கர்நாடக சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ஏப்ரலில் வெளியீடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கர்நாடக சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ஏப்ரலில் வெளியீடு

புதுடெல்லி: கர்நாடக தேர்தலில் 224 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டு இருப்பதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் பரமேஸ்வர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கர்நாடக சட்டசபை தேர்தல் குறித்து கர்நாடக மாநில தலைவர்களுடன், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

இதில் சித்தராமையா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது வேட்பாளர்கள் தேர்வு குறித்தும், தற்போது எம். எல். ஏ. க்களாக இருப்பவர்களுக்கு டிக்கெட் வழங்குவது தொடர்பாகவும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.



இது தொடர்பாக முதல்வர் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி முழு வீச்சில் தயாராக உள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 224 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்படும். வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய வருகிற 26, 27 மற்றும் 28-ந் தேதிகளில் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

பிற கட்சிகளில் இருந்து காங்கிரசில் சேர்ந்துள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. வெற்றி வாய்ப்புகளை ஆராய்ந்த பிறகே வேட்பாளராக போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

.

மூலக்கதை