கவர்னர் மாளிகையில் பறந்த ஹெலிகாம் திருவனந்தபுரத்தில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கவர்னர் மாளிகையில் பறந்த ஹெலிகாம் திருவனந்தபுரத்தில் பரபரப்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் கவர்னர் மாளிகையை ஹெலிகாம் பயன்படுத்தி படம் பிடித்த காமிராமேன் உள்பட 2 பேர் சிக்கினர். காவல்துறையில் பாதுகாப்புக்காக ஹெலிகாம் என்ற தானியங்கி பறக்கும் காமிராவை பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் பல அடி உயரத்தில் காமிராவை பறக்க விட்டு மேலிருந்து தரையில் நடக்கும் சம்பவங்களை பதிவு செய்ய முடியும்.

இந்த பறக்கும் காமிராக்கள் சமீபகாலமாக திருமண நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள கேரள கவர்னர் மாளிகைக்கு மேல் ஹெலிகாம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கவர்னர் மாளிகை பாதுகாப்பு அதிகாரிகள் திருவனந்தபுரம் கமிஷனர் பிரகாசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கமிஷனர் பிரகாஷ், துணை கமிஷர் ஜெயதேவ் ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கவர்னர் மாளிகை அருகில் உள்ள வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சிக்காக கொண்டுவரப்பட்ட காமிரா என்பது தெரியவந்தது.

இதையடுத்து காமிராமேன், அவரது உதவியாளர் ஆகியோரை போலீசார் பிடித்தனர். மேலும் ெஹலிகாமில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில் கவர்னர் மாளிகை தொடர்பான காட்சிகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. திருமண நிகழ்ச்சிகளை பதிவு செய்தபோது திசைமாறி கவர்னர் மாளிகை வளாகத்துக்குள் வந்தது தெரியவந்தது.

மேலும் இது தொடர்பாக கவர்னர் மாளிகையில் இருந்து புகார் தெரிவிக்கப்படவில்லை.

இதையடுத்து போலீசார் காமிராமேனை எச்சரித்து அனுப்பினர்.

.

மூலக்கதை