சென்னை ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னை ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். நண்பரை போலீசில் சிக்கவைக்க இச்செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் பேசிய ஒரு நபர், ‘’சென்னை விமானநிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அவை விரைவில் வெடித்து சிதறும்’ என்று அறிவித்துவிட்டு போன் இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதையடுத்து உடனடியாக சென்னை விமானநிலையத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்றனர்.   விமான நிலையம் முழுவதும் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். இதை பார்த்ததும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அனைத்து பகுதியிலும் போலீசார் சோதனை நடத்திய பிறகு அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

அது வெறும் புரளி என்று தெரிந்தது. இதையடுத்து, சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் நம்பரை வைத்து போலீசார் விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், ‘’சென்னை பள்ளிக்கரணையில் இருந்து போன்கால் வந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், பள்ளிக்கரணை பகுதியில் பதுங்கியிருந்த சக்திசரவணன், தீபானந்தம் உட்பட 3 பேரை இன்று அதிகாலை 3 மணியளவில் போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்தனர். இதில் ேசாழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் சக்திசரவணனிடம் நல்ல வேலை வாங்கி தருவதாக அவரது நண்பர் லைப்ரரியன், தீபானந்தம், 25 ஆயிரம் வாங்கியுள்ளார்.

இதன்பிறகு வேலை வாங்கி கொடுக்காமலும் பணத்தை திருப்பி தராமலும் அலைக்கழித்து வந்ததாக தெரிகிறது.

இவர்கள் 3 பேரும் நேற்று பள்ளிக்கரணையில் மது அருந்தியபோது தீபானந்ததத்தை போலீசில் மாட்டி விடுவதற்காக அவரது செல்போனில் இருந்து சக்திசரவணன், சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு ‘சென்னை விமானநிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அவை சிறிது நேரத்தில் வெடிக்கும்’ என்று தெரிவித்துள்ளர். இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் 3 பேரும் மது அருந்திக்கொண்டிருந்த இடத்தை செல்போன் டவர் மூலம் போலீசார் கண்டுபிடித்து சென்று கைது செய்துள்ளனர்.

.

மூலக்கதை