சென்னை துறைமுகத்தில் டிரெய்லர் லாரிகள் வேலைநிறுத்தம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னை துறைமுகத்தில் டிரெய்லர் லாரிகள் வேலைநிறுத்தம்

திருவொற்றியூர்: சென்னை துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் கன்டெய்னர்களை கையாள்வதற்கு, சென்னையில் நாள்தோறும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரெய்லர் லாரிகள் ஈடுபடுத்தப்படுகிறது. இந்நிலையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டீசல் மற்றும் உதிரிபாகங்களின் விலை உயர்வு ஆகியவற்றின் அடிப்படையில் கன்டெய்னர் லாரிகளின் வாடகையை உயர்த்தி தரவேண்டும். ஏற்கெனவே குறைக்கப்பட்ட வாடகையை கூடுதலாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை டிரெய்லர் லாரி உரிமையாளர்கள், சிஎப்எஸ் அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்துள்ளனர்.

எனினும், இக்கோரிக்கைகளின்மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 2 நாட்களுக்கு முன் ராயபுரத்தில் டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நிர்வாகிகள் ராஜா, எம்எம். கோபி, சுகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது தங்களது டிரெய்லர் லாரி வாடகையை உயர்த்தி தரும்வரை இன்று (19-ம் தேதி) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் துவங்கும் என தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, இன்று காலை 6 மணி முதல் டிரெய்லர் லாரிகள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர்களை ஏற்றி, இறக்கும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஓடாத டிரெய்லர் லாரிகள் அனைத்தும் மாதவரம், மஞ்சம்பாக்கம், சாத்தாங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள லாரி மையங்களில் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் சென்னை துறைமுகத்துக்கு பலகோடி நஷ்டம் ஏற்படுவதோடு, ஆயிரக்கணக்கான லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கிளினர்கள் மற்றும் உதவியாளர்கள் போதிய வருவாயின்றி பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே, டிரெய்லர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பரிசீலித்து, அவற்றை உடனடியாக நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

.

மூலக்கதை