ரஷ்யா ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் புடின் அமோக வெற்றி!

PARIS TAMIL  PARIS TAMIL
ரஷ்யா ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் புடின் அமோக வெற்றி!

ரஷ்யாவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புடின் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
 
ரஷ்யாவின் தற்போதைய ஜனாதிபதியான விளாடிமிர் புடினின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் நேற்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.
 
இத்தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உட்பட எட்டு பேர் போட்டியிட்டனர்.
 
சுயேட்சை வேட்பாளராக புடின் போட்டியிட்ட நிலையில், செர்கி பாபுரின் (ரஷ்ய அனைத்து மக்கள் யூனியன்), பவெல் குருடினின் (கம்யூனிஸ்ட் கட்சி), விளாடிமிர் சிரினோவ்ஸ்கி (லிபரல் ஜனநாயக கட்சி), கெசனியா சோப்சாக், மேக்சிம் சுரேகின் (ரஷ்ய கம்யூனிஸ்ட்), போரிஸ் டிடோவ் (வளர்ச்சி கட்சி), கிரிகோரி யாவ்லின்ஸ்கி (யப்லோகோ) ஆகியோரும் களத்தில் இருந்தனர்.
 
இத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தற்போதைய ஜனாதிபதியான புடினின் பிரச்சார குழு பல வித்தியாசமான வியூகங்களை கையாண்டது, குறிப்பாக தேர்தல் தொடர்பில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் உலகம் முழுவதும் வைரலாகின.
 
இந்நிலையில், 76 சதவிகித வாக்குகளை பெற்று புடின் வெற்றி பெற்றுள்ளதாக மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
புடினுக்கு அடுத்தபடியாக கம்யூனிஸ்டும், பெரும் பணக்காரருமான பாவல் குருடின் 12 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளார்.
 
முக்கிய எதிர்க்கட்சி தலைவரான அலக்சே நவால்னி தோல்வியை சந்தித்துள்ளார்.
 
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர்களில் தொலைக்காட்சி தொகுப்பாளரான கேசெனியா சோப்சக், 2 சதீவீதத்திற்கும் குறைவான வாக்குகளும், மூத்த தேசியவாதி விளாடிமிர் சிரினோஃப்ஸிகி 6 சதவீதத்திற்கு குறைவான வாக்குகளும் பெற்றிருந்தனர்.
 
இதனை வியக்கத்தக்க வெற்றி என புடினின் பிரச்சாரக்குழு தெரிவித்துள்ளது.
 
இதற்கு முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 64 சதவிகித வாக்குகளை புடின் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
 

மூலக்கதை