தங்ககாசு கொடுப்பதாக கூறி சென்னையை சேர்ந்தவரிடம் ரூ.40 லட்சம் நூதன மோசடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தங்ககாசு கொடுப்பதாக கூறி சென்னையை சேர்ந்தவரிடம் ரூ.40 லட்சம் நூதன மோசடி

மயிலம்: சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த பிரபு(34), சிந்தாதரிப்பேட்டையை சேர்ந்த ஜானகிராமன்(35) ஆகிய இருவரும் சென்னையில் ஓஎம்ஆர் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு பிரபுவின் கடைக்கு செந்தில் என்ற நபர் செல்போன் வாங்க வந்தார்.

பின்னர் அந்த கடையில் வேலை கேட்டுள்ளார். வேலை இல்லையென்று கூறிய நிலையில் பிரபுவின் செல்போன் எண் வாங்கி சென்றுள்ளார்.

சில நாட்கள் கழித்து மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு வேலை கேட்டுள்ளார். அதற்கு பிரபு வேலை இல்லை என கூறியுள்ளார்.

அப்போது தன்னிடம் தங்க காசு உள்ளது என கூறிய செந்தில், அதை மாற்றிக் கொண்டு பணம் கொடுக்க முடியுமா? என கேட்டுள்ளார். மேலும் புதுச்சேரி அருகே உள்ள சேதராப்பட்டுக்கு வந்தால் தங்ககாசு மாதிரி காட்டுகிறேன் என கூறியுள்ளார். இதையடுத்து பிரபு சேதராப்பட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது செந்தில் மற்றும் அவருடன் 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் ஒரு தங்க காசை கொடுத்து அதற்கு பணம் வாங்கிக்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று காலை செந்திலுடன் வந்த நபர்கள் பிரபுவை தொடர்பு கொண்டு, எங்களிடம் 2 கிலோ தங்ககாசு உள்ளது. ரூ. 40 லட்சம் பணம் எடுத்துக் கொண்டு மயிலம் வாருங்கள், தங்க காசை தருகிறோம் என்றனர்.

இதையடுத்து பிரபு தனது பக்கத்துக்கு கடைக்காரர் ஜானகிராமனுடன் ஒரு காரில் ரூ.

40 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு மயிலம் வந்துள்ளார். பின்னர் அந்த நபர்களுக்கு போன் செய்துள்ளார்.

அவர்கள், அங்குள்ள மண்டபம் அருகே காரை நிறுத்திவிட்டு தள்ளகுளத்தூர் ரோட்டில் நடந்து வருமாறு கூறியுள்ளனர். பிரபு மற்றும் ஜானகிராமன் பணத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் சொன்ன சாலையில் நடந்து சென்றுள்ளனர்.

அப்போது ஒரு தைலந்தோப்பு அருகே 3 பேர் நின்றுள்ளனர். அவர்கள் ஒரு குடுவையில் இருந்த தங்க காயினை காட்டியுள்ளனர்.

இதையடுத்து பிரபு ரூ. 40 லட்சம் பணத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார்.

அவர்கள் தங்க காசு இருந்த குடுவையை ஜானகிராமனிடம் கொடுத்துள்ளனர். பின்னர் அனைவரும் கார் நிறுத்திய இடத்துக்கு நடந்து வந்தனர்.



இதற்கிடையே ஜானகிராமனிடம் இருந்த தங்க காசு குடுவையை 3 பேரில் வந்த ஒருவர் தான் கொண்டு வருவதாக வாங்கிக்கொண்டார். அப்போது அந்த வழியாக ஒரு ஜீப் வந்து நின்றது.

இதனால் அதிர்ச்சியடைந்த பிரபு மற்றும் ஜானகிராமன் சற்று தொலைவில் தள்ளி நின்றுள்ளனர். அப்போது ரூ.

40 லட்சம் பணம் மற்றும் தங்ககாசு இருந்த குடுவை ஆகியவற்றுடன் 3 பேரும் ஜீப்பில் ஏறி தப்பி சென்றுள்ளனர். அதிர்ச்சியடைந்த பிரபு மற்றும் ஜானகிராமன் ஆகியோர் ஓடி வந்து காரை எடுத்துக்கொண்டு அவர்கள் சென்ற திசை நோக்கி சென்றனர்.

ஆனால் அதற்குள் அவர்கள் மாயமாக மறைந்துவிட்டனர். இதுகுறித்து பிரபு மயிலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்.



.

மூலக்கதை