வீட்டுமனைகள் அப்ரூவல் பெற ஆளுங்கட்சியினர் மிஸ்டு கால் சேவை: தமிழகம் முழுவதும் நூதன வசூல் வேட்டை

தமிழ் முரசு  தமிழ் முரசு
வீட்டுமனைகள் அப்ரூவல் பெற ஆளுங்கட்சியினர் மிஸ்டு கால் சேவை: தமிழகம் முழுவதும் நூதன வசூல் வேட்டை

சீர்காழி: தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் பல ஆண்டுகளாக அனுமதி பெறாத வீட்டு மனைகள் உள்ளன.    பல லட்சம் ரூபாய் கொடுத்து இந்த மனைகளில் இடம் வாங்கியவர்கள், அப்ரூவல் இல்லாததால்  வீடு கட்ட முடியாமலும், இந்த நிலபத்திரத்தை காட்டி கடன் பெற முடியாமலும், மின்சாரம், குடிநீர் இணைப்பு பெற முடியாமலும் தவிக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்  ஒரு அறிவிப்பினை  அரசு வெளியிட்டது. அதில் அனுமதி பெறாத வீட்டுமனைகளை வாங்கியவர்கள்  சிலவிதிகளுக்கு உட்பட்டு அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தது.

அதன்படி புதிதாக  மனைப்பிரிவுகள் போடப்பட்டு அதில் ஒரு மனை விற்பனை செய்யப்பட்டு  பத்திரபதிவு செய்திருந்தால் மட்டுமே இத்திட்டத்தில் வீட்டு மனைகளாக அனுமதி  பெற முடியும்.    இந்த விவரம் சாதாரண மக்களுக்கு தெரிவதில்லை. மேலும் அவர்கள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகினாலும் வேலைகள் நடப்பதில்லை.

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மனைப்பிரிவுகளுக்கு அனுமதிெபற வேண்டுமானால்  சம்பந்தப்பட்டவர்கள் தஞ்சையில் உள்ள  நகர, ஊரமைப்பு திட்ட இயக்குனர் அலுவலகத்தை அணுக வேண்டும். இந்த அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. மேலும் இங்கு இயக்குனரும் இல்லை.

இன்னொரு மாவட்டத்தில் உள்ளவர்கள் தான் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். இதனால் இங்கு விண்ணப்பங்கள் தேங்கி கிடக்கிறது.

இந்த அலுவலகத்துக்கு சென்று  தங்களது மனைப்பிரிவுகளை ஆய்வு செய்து அப்ரூவல் வழங்க கேட்டுக்கொண்டால், அவர்கள் வராமல் இழுத்தடிக்கிறார்கள்.

அலுவலகத்துக்கு சென்று ஏன் வரவில்லை என்று கேட்கலாம் என சென்றால் அந்த அலுவலகத்தில் உள்ளவர்கள் ஒரு செல்போன் நம்பரை கொடுக்கிறார்கள். அந்த நம்பரில் மிஸ்டு கால் கொடுங்கள்.

மற்ற விவரங்கள் அந்த நம்பரில் உள்ளவர்கள் உங்களுக்கு தெரிவிப்பார்கள் என கூறுகிறார்கள்.
அதன்படி அந்த நம்பரில் மிஸ்டு கால் கொடுத்தால், உடனடியாக அதில் இருந்து ஒருவர் பேசுகிறார். நான் இந்த மாவட்டத்தில் இன்ன பொறுப்பில் இருக்கிறேன்.

பத்திரப்பதிவுக்கு ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் கொடுங்கள், முடித்து கொடுக்கிறோம். இன்னும் ஒன்றரை  மாதம்போனால் எதுவும் செய்ய முடியாது.

வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ேம மாதத்திற்கு பிறகு எதுவும் செய்ய முடியாது.

போட்ட முதல் எல்லாம் வீணாகி விடும் என்கிறார்கள்.
அவர்கள் கேட்டபடி பணத்தை கொடுத்தால் உடனடியாக அப்ரூவல் கிடைக்கிறது. தமிழகம் முழுவதும் இந்த மிஸ்டு கால் சேவை அமோகமாக நடக்கிறது.

இதன் மூலம் மேலிடத்தில் 2ம் இடத்தில் உள்ளவருக்கு தினமும் ரூ. 1 கோடி வரை கிடைக்கிறதாம்.

சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள், ஊழியர்களுக்கும் சிறிது கவனிப்பு  நடக்கிறதாம்.

.

மூலக்கதை