ஐகோர்ட் உத்தரவிட்டும் பணி வழங்கவில்லை பட்டதாரி ஆசிரியர் திடீர் சாவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐகோர்ட் உத்தரவிட்டும் பணி வழங்கவில்லை பட்டதாரி ஆசிரியர் திடீர் சாவு

வானூர்: ஐகோர்ட் உத்தரவிட்டும் தமிழக அரசு பணி வழங்காத நிலையில் மனஉளைச்சல் அடைந்த பட்டதாரி ஆசிரியர் திடீரென இறந்தார். விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா தைலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி(52).

இரண்டு எம். ஏ பட்டங்களும், பி. எட் படிப்பும் முடித்து இருந்தார். கடந்த 2013ம் ஆண்டு அரசு நடத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியுள்ளார்.

அப்போது கேள்வித்தாளில் தேசியகீதம் முதன்முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது என்று வந்துள்ளது. அதற்கு வங்காள மொழி என்று வீரமணி எழுதியுள்ளார்.

அவர் எழுதியது தவறு என்றும் சமஸ்கிருதம் தான் சரியான பதில் என்றும் அந்த கேள்விக்கு மதிப்பெண் அளிக்காமல் விட்டுள்ளனர். இதனால் வீரமணிக்கு ஒரு மதிப்பெண் குறைவால் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததின்பேரில் கடந்த 2017ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் மனுதாரர் வீரமணிக்கு 4 வாரத்துக்குள் அரசு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் பணி வழங்காமல் இழுத்தடித்து வந்த நிலையில் நேற்று வந்த ஆங்கில நாளேட்டில் மீண்டும் ஆசிரியர் பணி வெயிட்டேஜ் முறையில் நியமனம் செய்யப்படும் என்று இருந்ததை வீரமணி பார்த்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

உடனடியாக உறவினர்கள் அவரை ஆம்புலன்சில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அரசின் அலட்சியத்தால் மரணடைந்த ஆசிரியர் குடும்பத்துக்கு அரசு உதவி வழங்கவேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.

மூலக்கதை