மேலாண் வாரிய விவகாரம் நாடாளுமன்றம் முன்பு தொடர் உண்ணாவிரதம்: காவிரி விவசாயிகள் முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மேலாண் வாரிய விவகாரம் நாடாளுமன்றம் முன்பு தொடர் உண்ணாவிரதம்: காவிரி விவசாயிகள் முடிவு

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று நடந்த தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டத்துக்கு பின், பொதுச்செயலாளர் பி. ஆர். பாண்டியன் பேட்டி: காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று குழுவை உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று மார்ச் 30ம் தேதிக்குள் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு வரும் 26ம் தேதி முதல் தொடர்  உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதன்படி தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 வரை போராட்டம் நடத்தப்படும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை தமிழக எம்பிக்கள் ஆதரிக்க வேண்டும்.

மேலும், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்ய காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம். 2016-17ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகையை மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து புள்ளியியல் துறை ஆய்வறிக்கை அடிப்படையில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முழுமையாக பெற்றுள்ளன.

ஆனால் விவசாயிகளுக்கு 30 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவு சங்க தேர்தலை அரசியல் தலையீடு இல்லாமல் வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும். அதன் பொறுப்புகளில் விவசாயிகள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பி. ஆர். பாண்டியன் கூறினார்.

.

மூலக்கதை