விமானம் போல ரயிலுக்கு கட்டணம்: பரிந்துரை நிராகரிப்பு

தினமலர்  தினமலர்
விமானம் போல ரயிலுக்கு கட்டணம்: பரிந்துரை நிராகரிப்பு

புதுடில்லி : 'விமானங்களுக்கு வசூலிப்பது போல், 'டைனமிக்' எனப்படும், மக்களின் வரவேற்புக்கு ஏற்ப கட்டணத்தை அதிகரித்துக் கொள்ளும் முறையை, ரயில்களிலும் கொண்டு வரலாம்' என்ற பரிந்துரையை, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் நிராகரித்துள்ளார்.

ரயில் கட்டணம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்ததாவது: அதி விரைவு ரயில்கள், கீழ் பெர்த், கடைசி நேரத்தில் பயணம் செய்வோர், விழாக்காலங்கள் போன்ற சந்தர்ப்பங்களில், கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கலாம்.

பிளெக்சி பேர் முறையால், ரயில்வேக்கு வருவாயும் உயர்ந்துள்ளது; பயணியரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. 2015 - 16ல், 138.71 லட்சம் டிக்கெட்கள் மூலம், 1,931 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. 2016 செப்டம்பரில், பிளெக்சி பேர் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அந்த, 2016 - 17 நிதியாண்டில், 137.39 லட்சம் டிக்கெட்கள் மூலம், 2,192 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.

இது, 2017 - 18ல், பிப்ரவரி வரையில், 140.88 லட்சம் டிக்கெட்கள் மூலம், 2,296 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. அதனால், விமானங்களில் வசூலிப்பது போல், டைனமிக் எனப்படும் மக்களின் வரவேற்பு அதிகமாக இருக்கும் காலத்தில், கட்டணத்தை உயர்த்திக் கொள்ளும் முறையை ரயில்களுக்கும் கொண்டு வரலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த அறிக்கையில் கூறியுள்ள பரிந்துரைகளை, மத்திய ரயில்வே அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பியுஷ் கோயல் ஏற்கவில்லை. தங்களுடைய பரிந்துரைகளை மறு ஆய்வு செய்து, மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆராயும்படி, அவர் கூறியுள்ளதாக, ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை