மீண்டும் ரஷ்ய அதிபராகிறார் புடின்?

தினமலர்  தினமலர்
மீண்டும் ரஷ்ய அதிபராகிறார் புடின்?

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் விளாடிமிர் புடினுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிந்துள்ளது.
ரஷ்யா அதிபர், பின் பிரதமர், பின் மீண்டும் அதிபர் என 2000ம் ஆண்டு முதல் 18 ஆண்டுகளாக ரஷ்யாவின் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர் புடின். உலகத் தலைவர்களில், பலமானவராக கருதப்படுபவர். பல்வேறு வகையிலும் அமெரிக்காவுக்கு போட்டி கொடுத்து வருகிறார்.
கடந்த 1952 அக்., 7ல் அப்போதைய சோவியத் யூனியனில் லெனின்கிராட் (தற்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்) பகுதியில் புடின் பிறந்தார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மாநில கல்லுாரியில் பட்டப்படிப்பு முடித்தார். 16 ஆண்டுகள், வெளிநாட்டு உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றினார். கடந்த 1991ல் அரசியலில் நுழைந்தார். 1996ல் அதிபராக இருந்த போரிஸ் யெல்ட்சின் நிர்வாகத்தில் புடின் சேர்ந்தார்.
யெல்ட்சின் ராஜினாமாவுக்குப்பின், 1999ல் பொறுப்பு அதிபராக வரும் அளவுக்கு உயர்ந்தார். கடந்த 2000ம் ஆண்டு அதிபர் தேர்தலில், 53 சதவீத ஓட்டுகள் பெற்று, முதன்முறையாக அதிபரானார். இவரது ஆட்சியில் ரஷ்யாவின் பொருளாதாரம் மற்றும் ஜி.டி.பி., வளர்ச்சி அடைந்தது. 2004ல்72 சதவீத ஓட்டுகள் பெற்று, இரண்டாவது முறை அதிபரானார்.
ரஷ்யாவில் தொடர்ந்து இரண்டு முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்க முடியும். இதனால் புடின், 2008ல், மூன்றாவது முறை அதிபராக முடியவில்லை. அதிபராக பதவியேற்ற டிமிட்ரி மெத்ததேவ், புடினை பிரதமராக நியமித்தார். கடந்த 2011ல் அதிபரின் பதவிக்காலம், நான்கில் இருந்து ஆறு ஆண்டாக உயர்த்தப்பட்டது. 2012 அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற புடின், 3வது முறை அதிபரனார்.
நேற்று நடந்த அதிபர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார். இவருக்கு எதிர்ப்பு இருந்தாலும், தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் புடினே வெற்றி பெறுவார் என கூறுகின்றன.

மூலக்கதை