ரசிகரின் வாக்குறுதியை காப்பாற்றிய ரோஹித்!

PARIS TAMIL  PARIS TAMIL
ரசிகரின் வாக்குறுதியை காப்பாற்றிய ரோஹித்!

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா, தன்னுடைய இலங்கை ரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இலங்கையைச் சேர்ந்த முகமது நிலாம் என்பவர் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியை காண இந்தியா வந்துள்ளார். இவர் ரோஹித் ஷர்மாவின் தீவிர ரசிகர் ஆவார்.
 
அப்போது, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது தந்தை நிலைமை மோசமடைந்ததாக நிலாமுக்கு தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து, இலங்கைக்கு உடனடியாக செல்ல நினைத்த நிலாமிடம் விமான பயணத்திற்கு போதிய பணம் இல்லை.
 
இந்நிலையில், சுதிர் கௌதம் என்பவர் மூலமாக இந்திய வீரர் ரோஹித் ஷர்மாவுக்கு நிலாமின் நிலை தெரிய வந்தது. உடனடியாக அவரை தொடர்பு கொண்ட ரோஹித், விமான டிக்கெட் மற்றும் பணம் ஆகியவற்றை நிலாமிடம் அளித்து இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.
 
மேலும், மார்ச் மாதம் இலங்கைக்கு தாம் வரும்போது நிலாமின் வீட்டிற்கு வருகை தருவதாகவும் வாக்குறுதி அளித்தார் ரோஹித் ஷர்மா.
 
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நிலாமின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்தார் ரோஹித் ஷர்மா. பின்னர் இது குறித்து ரோஹித் ஷர்மா கூறுகையில்,
 
‘பல ஆண்டுகளாக எனக்கு நிலாமை தெரியும். என்னை அதிகமாக உற்சாகப்படுத்தியவர் அவர். அவர் இந்தியாவுக்கு வந்திருந்தபோது, தனது தந்தையின் உடல்நிலை சரியில்லை என்று கூறி அழுதது இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது.
 
இவர்கள் போன்றவர்கள் தான், கடினமான சூழ்நிலைகளில் நமக்கு பக்க பலமாக இருப்பார்கள். நான் மார்ச் மாதம் இலங்கைக்கு விளையாட வரும்போது, கண்டிப்பாக நிலாமின் வீட்டிற்கு வந்து அவரின் தந்தையை சந்திப்பேன் என்று கூறினேன்.
 
அதன்படி இன்று அவர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது’ என தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து முகமது நிலாம் கூறுகையில்,
 
‘ரோஹித் ஒரு தூய உள்ளம் கொண்ட மனிதர். அன்றைய தினம் என் தந்தையின் உடல்நிலை மோசமாக இருந்ததாக எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், உண்மையாகவே என்னிடம் அப்போது பயணத்திற்கான பணம் இல்லை.
 
எனக்கு இந்தியாவில் யாரையும் தெரியாது. அப்போது சச்சின் டெண்டுல்கரின் ரசிகர் சுதிர் என்பவர், என்னை ரோஹித் ஷர்மாவை சந்திக்க வைத்தார். அப்போது ரோஹித் என்னிடம் விமான டிக்கெட் மற்றும் பணம் அளித்தார்.
 
ரோஹித் ஷர்மாவின் ஆட்டத்திறனை விட, அவரின் நற்குணமும், எளிமையும் தான் அவரை மற்றவர்களிடமிருந்து தனித்து காட்டுகிறது’ என தெரிவித்துள்ளார். 
 
 

மூலக்கதை