திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி....நடராஜன் கவலைக்கிடம்: பரோலில் வருகிறார் சசிகலா

தமிழ் முரசு  தமிழ் முரசு
திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி....நடராஜன் கவலைக்கிடம்: பரோலில் வருகிறார் சசிகலா

சென்னை: சசிகலா  கணவர் நடராஜன் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற  சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது  கணவர் எம். நடராஜன்.

இவருக்கு கடந்த அக்டோபரில் சிறுநீரகம், கல்லீரல்  செயலிழந்தது. உடனே சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவை  சிகிச்சை செய்யப்பட்டது. விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த  புதுக்கோட்டையை சேர்ந்த வாலிபர் ஒருவரின் கல்லீரல், சிறுநீரகம் நடராஜனுக்கு  பொருத்தப்பட்டது.

இதை தொடர்ந்து பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா 5  நாள் பரோலில் வந்து, கணவரை பார்த்து சென்றார்.

இந்நிலையில் 1 மாத  சிகிச்சைக்கு பின் நவம்பர் 2ம் தேதி நடராஜன் வீடு திரும்பினார். தொடர்ந்து மகாலிங்கபுரத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி  ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு நடராஜனுக்கு திடீரென  நெஞ்சுவலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரை உறவினர்கள் குளோபல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை டாக்டர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தீவிர  சிகிச்சை அளித்து வருகின்றனர். நடராஜன் உடல் நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நடராஜன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவர்  திருமாவளவன் மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்தார்.

பின்னர்  அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் நடராஜனின் உடல் நிலை குறித்து  கேட்டறிந்தார். பின்னர் திருமாவளவன் கூறுகையில், நடராஜனுக்கு  தீவிரமாகவும், கவனமாகவும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவர்  நலமடைந்து வீடு திரும்புவார் என நம்புகிறேன்’ என்றார்.

தொடர்ந்து மதிமுக பொது  செயலாளர் வைகோவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனும் மருத்துவமனைக்கு சென்று நடராஜனை பார்த்தனர்.

தொடர்ந்து மருத்துவர்களிடம் அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். நடராஜன்  உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பது குறித்து பெங்களூரு சிறையில் உள்ள  சசிகலாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா தனது கணவர் நடராஜனை பார்க்க  பரோல் கேட்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. சசிகலா ஓரிரு நாளில் பரோல் கேட்டு  சிறைத்துறை அதிகாரிகளிடம் விண்ணப்பிப்பார் என்று கூறப்படுகிறது.


பொதுவாக  தண்டனை கைதிகளுக்கு 6 மாதத்துக்கு ஒரு முறை தான் பரோல் வழங்கப்படும்.   கடந்த அக்டோபரில் சசிகலா பரோலில் வந்து சென்றார். எனவே அவர் கடைசியாக  பரோலில் சென்று 5 மாதம் தான் ஆகிறது.

எனவே சசிகலாவுக்கு பரோல் கிடைக்குமா  என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனாலும் கணவர் ஆபத்தான நிலையில் இருப்பதால், சசிகலாவுக்கு பரோல் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடராஜன் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கும் தகவல் அறிந்து சசிகலாவின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

.

மூலக்கதை