'முகநூல்' தகவல் வேகமா கசியுது!

தினமலர்  தினமலர்
முகநூல் தகவல் வேகமா கசியுது!

நியூயார்க், சமூக வலைதளமான 'முகநுால்' (பேஸ்புக்) நிறுவனத்தின் தகவல்களை கசியவிடும் ஊழியர்களை கண்டறிய, ரகசிய போலீஸ் படையை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க்
ஜுகர்பெர்க் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'முகநுால்' நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. இதற்காக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுகர்பெர்க், சிறப்பு குழுவினரை அமைத்து நாள்தோறும் புது செயல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
ஆனால், வெளியிடும் திட்டங்கள் முன்கூட்டியே போட்டி நிறுவனங்களுக்கு கசிந்து விடுகிறது. ஆயிரக்கணக்கான ஊழியர்களுடன் பேசும் ஜுகர்பெர்க், திட்டங்களை அறிவித்து வருகிறார்.
சில ஊழியர்கள் உளவாளிகளாக இருந்து வேறு நிறுவனங்களுக்கு தகவல்களை கசிய விடுவதாக தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடிப்பதற்காக ரகசிய படை ஒன்றை உருவாக்கியுள்ளார்.
'முகநுால்' ஊழியர்களை இப்படையினர் கண்காணித்து வருகின்றனர். அவர்களின் தொலைபேசி, இணைய பதிவுகள் உள்ளிட்ட தகவல் பரிமாற்றத்தை கண்காணித்து, அவர்களின் தொடர்புகள் குறித்த தகவல்களை திரட்டுகின்றனர்.
தகவல்களை பரிமாற்றம் செய்யும் போது, சில ஊழியர்களை பிடித்து விடுவது இந்த ரகசிய படையின் சிறப்பு.
'முகநுால்' நிறுவனத்தின் ஊழியர்கள் சிலருக்கு, பதவி உயர்வு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
பதவி உயர்வை எண்ணி மகிழ்ச்சியுடன் சென்ற ஊழியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
சில தகவல்களை அவர்கள் பிறருக்கு பரிமாற்றம் செய்தது தொடர்பான ஆதாரங்களுடன், விசாரணை அதிகாரிகள் கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர். பின், ஊழியர்களுக்கு பதவி நீக்கம்தான் பரிசாக கிடைத்தது.

மூலக்கதை