தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்:பிரிட்டன்- ரஷ்யா ஏட்டிக்கு போட்டி

தினமலர்  தினமலர்
தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்:பிரிட்டன் ரஷ்யா ஏட்டிக்கு போட்டி

மாஸ்கோ, முன்னாள் உளவாளி மீது நடத்தப்பட்ட நச்சுத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ரஷ்யத் துாதரக அதிகாரிகள் 23 பேரை பிரிட்டன் வெளியேற்றியது. இதையடுத்து பிரிட்டன் துாதரக அதிகாரிகள் வெளியேற ரஷ்யா உத்தர
விட்டுள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் பார்லி.,யில் பிரதமர் தெரசா மே பேசியதாவது:
முன்னாள் உளவாளி செர்கெய் ஸ்க்ரிபால் மற்றும் அவரது மகள் மீது நடத்தப்பட்ட நச்சுத் தாக்குதலுக்கு ரஷ்யாதான் காரணம். இந்தக் கொலை முயற்சிக்கு எதிராக அந்நாட்டுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த முக்கிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுகின்றன.
பேச்சுவார்த்தைக்காக பிரிட்டனுக்கு வருமாறு ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவுக்கு
விடுக்கப்பட்டிருந்த அழைப்பும் ரத்து செய்யப்படுகிறது. ரஷ்ய துாதரகத்தைச் சேர்ந்த 23 அதிகாரிகள் ரகசிய உளவாளிகளாக அறிவிக்கப்படுகின்றனர். அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் அவர்கள் பிரிட்டனை விட்டு வெளியேற வேண்டும்.
இவ்வாறு தெரசா மே பேசினார்.
ரஷ்யாவைச் சேர்ந்த செர்கெய் ஸ்க்ரிபால், 66, கடந்த 1990-ல் அந்நாட்டின் ராணுவ உளவு அமைப்பில் பணியாற்றினார். இந்நிலையில், பிரிட்டனின் உளவுப் பிரிவான 'எம்ஐ6' அமைப்பிலும் ரகசியமாக இணைந்த அவர், அந்நாட்டுக்கு ரகசியத் தகவல்களை அளித்து வந்தார். அவரது நடவடிக்கையைக் கண்டுபிடித்த ரஷ்ய அதிகாரிகள், 2004-ல் செர்கெய் ஸ்க்ரிபாலை கைது செய்தனர்.
தேசத் துரோக குற்றச்சாட்டின் கீழ் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பின், உளவுக் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் செர்கெய் ஸ்கிரிபால் உட்பட மூவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டனர்.
ஸ்கிரிபாலுக்கு பிரிட்டன் அடைக்கலம் அளித்தது. இதையடுத்து, வில்ட்ஷைர் மாகாணத்தின் சாலிஸ்பரி நகரில் மகள் யுலியாவுடன், 33, வசித்து வந்தார்.
இந்நிலையில் மார்ச் 4ல் செர்கெய் ஸ்க்ரிபாலும், யுலியாவும் பூங்காவில் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்கள் மீது நச்சுப்பொருள் செலுத்தப்பட்டதால் உடல்நிலை ஆபத்தான நிலையை அடைந்தது.
இதற்கிடையே, 'இதுகுறித்து மார்ச் 13க்குள் விளக்கம் அளிக்க வேண்டும்' என தெரசா மே, ரஷயாவுக்கு கெடு விதித்திருந்தார். குற்றச்சாட்டை மறுத்து வரும் ரஷ்யா, 'எங்கள் மீது மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிர்வினையை பிரிட்டன் சந்திக்க வேண்டியிருக்கும்' என எச்சரித்தது.

மூலக்கதை