வருவாயை உயர்த்த ஜவுளி துறை முடிவு

தினமலர்  தினமலர்
வருவாயை உயர்த்த ஜவுளி துறை முடிவு

கோயம்புத்துார்: மத்திய அரசு, அடுத்த ஏழு ஆண்டுகளில், ஜவுளி துறை வருவாயை, இரு மடங்கு உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
இது குறித்து, ஜவுளி துறை ஆணையர், கவிதா குப்தா கூறியதாவது: ஜவுளி துறையின் வருவாய், தற்போது, 15 ஆயிரம் கோடி டாலராக உள்ளது. இதில், உள்நாட்டின் மொத்த ஜவுளி விற்பனை மூலம், 11ஆயிரம் கோடி டாலர் கிடைக்கிறது. ஜவுளி ஏற்றுமதி வாயிலாக, 4,000 கோடி டாலர் வருவாய் ஈட்டப்படுகிறது. இந்நிலையில், ஜவுளி துறை வருவாயை மேலும் அதிகரிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வரும், 2025ல், ஜவுளி துறை வருவாயை, 30 ஆயிரம் கோடி டாலராக, அதாவது, 19.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது. இந்த இலக்கை எட்ட, ஜவுளி துறையினர், பருத்தி மற்றும் செயற்கை ஜவுளி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். தற்போது, ஆண்டுக்கு, பருத்தி ஜவுளி மற்றும் செயற்கை ஜவுளி உற்பத்தி, முறையே, 650 கோடி கிலோ மற்றும், 250 கோடி கிலோவாக உள்ளது. இது, இரு மடங்கு உயர்த்தப்பட வேண்டும். உற்பத்தி திறனை அதிகரிப்பதன் மூலம், நாம், 800 கோடி கிலோ பருத்தி ஜவுளியை தயாரிக்க முடியும். எஞ்சியதை, செயற்கை ஜவுளி மூலம் பூர்த்தி செய்யலாம். சர்வதேச ஜவுளி உற்பத்தியில், பருத்தி ஜவுளியின் பங்கு, 30 சதவீதம்; செயற்கை ஜவுளியின் பங்கு, 70 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் பருத்தி ஜவுளியின் பங்கு, 70 சதவீதமாக உள்ளது.ஆயத்த ஆடைகள் மற்றும் வீடு – வர்த்தக பயன்பாட்டிற்கான ஜவுளிகள் துறையில், 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ஜவுளிகளுக்கு வரவேற்பு பெருகி வருவதால், முதலீடு மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
2.50 லட்சம் பேருக்கு வேலை : மத்திய அரசு, 2016, ஜூனில், ஜவுளி துறைக்கு, 6,000 கோடி ரூபாய் ஊக்கச் சலுகை திட்டத்தை அறிவித்தது. அது முதல், ஆடை மற்றும் வீடு – வர்த்தக ஜவுளிகள் பயன்பாட்டு துறையில், புதிதாக, 2.50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன.

மூலக்கதை