அதிகரித்து வரும் அமெரிக்க வர்த்தக உரசல்

தினமலர்  தினமலர்
அதிகரித்து வரும் அமெரிக்க வர்த்தக உரசல்

வாஷிங்டன் : ‘இந்தியா உடனான வர்த்தக உறவில் தான் உரசல் போக்கு காணப்படுகிறது’ என, அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், உள்நாட்டு நலன் என்ற போர்வையில் எடுத்து வரும் நடவடிக்கைகளால், இந்தியா உட்பட, பல நாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சுங்கவரி : டிரம்ப், கடந்த ஆண்டு அதிபர் பொறுப்பேற்றதும், ‘எச் 1பி’ விசா விதிமுறைகளை கடுமையாக்கினார். இது, அமெரிக்காவில் உள்ள துணை நிறுவனங்களுக்கு, அதிக அளவில் பணியாளர்களை அனுப்பும், இந்திய ஐ.டி., நிறுவனங்களை பாதித்துள்ளது.சமீபத்தில், உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் இறக்குமதிக்கு, முறையே, 25 மற்றும், 10 சதவீதம் வரி விதித்தார். இது, இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ‘அமெரிக்காவின் நடவடிக்கைக்கு, தக்க பதிலடி தருவோம்; சர்வதேச வர்த்தகப் போர் மூளும்’ என, ஜெர்மனி எச்சரித்துள்ளது.‘வர்த்தகப் போர் வந்தால் நல்லது; அதிலும் அமெரிக்கா வெல்லும்’ என, பதிலுக்கு டிரம்ப் கொக்கரித்தார். இந்நிலையில், அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் இறக்குமதிக்கு, இந்தியாவில், 50 சதவீதம் வரி விதிக்கப்படுவதும், டிரம்ப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இறக்குமதியாகும், இந்திய மோட்டார் சைக்கிள்களுக்கு வரி விலக்கு தருவதால், ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளுக்கு, இந்தியா வரி விதிக்கக் கூடாது என, டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மானியம் : இந்த பிரச்னை குறித்து, ஒரே மாதத்தில், மூன்று முறை டிரம்ப் பேசியதில் இருந்து, அவர், இந்தியா உடனான வர்த்தகத்தில், மோதல் போக்கை கடைபிடிக்க துவங்கியிருப்பது, வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இந்நிலையில், ‘இந்தியா ஆறு திட்டங்களின் கீழ் வழங்கும் ஏற்றுமதி மானியத்தை நிறுத்த வேண்டும்’ என, சில தினங்களுக்கு முன், அமெரிக்கா, உலக வர்த்தக அமைப்பிடம் வலியுறுத்தியுள்ளது. ஏற்றுமதி மானியம் காரணமாக, இந்தியா குறைந்த விலையில் அனுப்பும் பொருட்களால், அமெரிக்க நிறுவனங்களும், அதை சார்ந்துள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்படுவதாக, டிரம்ப் அரசு புகார் கூறியுள்ளது.இதைத் தொடர்ந்து, வாஷிங்டன் விரைந்த, மத்திய வெளியுறவு செயலர், விஜய் கோகலே, அமெரிக்க வர்த்தக துறை பிரதிநிதி, ராபர்ட் லைட்தைசருடன் பேச்சு நடத்தியுள்ளார்.இந்நிலையில், டிரம்ப் நடவடிக்கைகள் குறித்து, அமெரிக்க அரசு துறையைச் சேர்ந்த, பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில், வர்த்தக முதலீடுகளை அதிகரிக்க அமெரிக்கா ஆர்வமாகவே உள்ளது. அதேசமயம், இந்தி யாவுடன் நியாயமான, வெளிப்படையான, பரஸ்பர வர்த்தகம் புரியவே, டிரம்ப் விரும்புகிறார். அதாவது, அமெரிக்கா – இந்தியா இடையே, ஒரே மாதிரியான இறக்குமதி வரி இருக்க வேண்டும் என்பது அவர் எதிர்பார்ப்பு. அதனால் தான், ஹார்லி டேவிட்சன் வாகனத்திற்கு, இறக்குமதி வரி கூடாது என்கிறார்.மேலும், அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தக பற்றாக்குறையை குறைக்கவும், டிரம்ப் விரும்புகிறார். தற்போது, இந்தியாவுக்கு, அமெரிக்கா, கச்சா எண்ணெய் அனுப்புவதால், வர்த்தக பற்றாக்குறை சற்று குறைந்துள்ளது.அமெரிக்கா – இந்தியா இடையே பொதுவான நல்லிணக்கம் நீடிக்கின்ற போதிலும், வர்த்தக உறவில் தான் உரசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண, விரைவில், இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்கள், செயலர்கள் பேச்சு நடத்த உள்ளனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை