ஓட்டுப்பதிவை கட்டாயமாக்க 'மாஜி' தேர்தல் ஆணையர் விருப்பம்

தினமலர்  தினமலர்
ஓட்டுப்பதிவை கட்டாயமாக்க மாஜி தேர்தல் ஆணையர் விருப்பம்

பெங்களூரு: “தேர்தல் குறித்து, இந்தியர்களுக்கு இன்னும் விழிப்புணர்வு வரவில்லை. ஓட்டுப்பதிவை கட்டாயமாக்க வேண்டும். கள்ள ஓட்டு போடுவதை தடுக்க, கடும் தண்டனை விதிக்க வேண்டும்,” என, ஓய்வுபெற்ற மத்திய தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்தார்.

கர்நாடக மக்களாட்சி மற்றும் மத நல்லிணக்க கமிட்டி, ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற மத்திய தேர்தல் ஆணையர் குரேஷி பங்கேற்றார். அவர் பேசியதாவது: பணம், பரிசு வழங்காத மற்றும் ரத்தம் பார்க்காத தேர்தலை, இனிமேல் பார்க்க சாத்தியமில்லை. கடந்த லோக்சபா தேர்தலில், கோடிக்கணக்கான வாக்காளர்கள் ஓட்டுபோடவில்லை. ஓட்டு போடுவது குறித்து, கட்டாய கல்வி தேவையுள்ளது. கட்டாய ஓட்டுப்பதிவுக்காக, 20 - 25 ஆண்டுகளாக, மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. ஆனால் இதுவரை எந்த அரசும், சட்டம் இயற்ற முன்வரவில்லை. உச்ச நீதிமன்றம் மூலமாகவே, அரசுக்கு உத்தரவு போடும் தேவையுள்ளது.ஓட்டு மையம் என்பது கோவில் போன்றது. சட்டம் இயற்றுவது மற்றும் மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதை, புனிதம் என்று அனைவரும் கருத வேண்டும்.

தேர்தலில், ஒரு எம்.எல்.ஏ., வேட்பாளருக்கு, 28 லட்சம் ரூபாய்; எம்.பி., வேட்பாளருக்கு, 70 லட்சம் ரூபாய் செலவு செய்ய சட்டத்தில் இடமுள்ளது. அளவுக்கு மீறி செலவு செய்யப்படுகிறது. இது குறித்து, புகார் அளிக்க, எந்த குடிமகனும் முன்வரவில்லை. ஓட்டுப்பதிவுக்கு பெட்டியை பயன்படுத்திய காலத்தில், கள்ள ஓட்டுக்கு வாய்ப்பிருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் நவீனமாகி வருகின்றன. தற்போது, வி.வி.பி.டி., என்ற, 'யாருக்கு ஓட்டு போடும் என்பதை அறியும் இயந்திரம்' பயன்படுத்தப்படுகிறது. அதில், யாருக்கு ஓட்டு போடுகிறோம் என்ற சீட்டையும் பெற முடியும். இதனால், ஓட்டு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டாலும், உண்மையான தகவல் கிடைக்கும். தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள், சரியில்லை என பெரும்பாலானோர் ஓட்டளிக்க முன்வருவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை