'மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்

தினமலர்  தினமலர்
மொபைல் மணி டிரான்ஸ்பர் நிறுத்தம்

போதிய வரவேற்பு இல்லாததால், 'மொபைல் மணி டிரான்ஸ்பர்' சேவையை நிறுத்த, தபால் துறை முடிவு செய்துள்ளது.
தபால் துறை, 'மொபைல் மணி டிரான்ஸ்பர்' என்ற சேவையை, 2013ல் துவக்கியது. இந்த சேவையின் கீழ், பணம் அனுப்புவோர், தபால் நிலையத்திற்கு சென்று, யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ, அவரின் பெயர், மொபைல் எண், முகவரியை குறிப்பிட்டு, படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். உடனே, ஆறு இலக்க ரகசிய குறியீட்டு எண் வழங்கப்படும்.பின், பணம் பெறுபவருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம், குறியீட்டு எண்ணை தெரிவிக்க வேண்டும். பணம் பெறுபவர், அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று, மொபைல் எண், ரகசிய குறியீட்டு எண்ணை காட்டி, பணம் பெற்று கொள்ளலாம். இதற்கு, 45 முதல், 112 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது, அந்த சேவை நிறுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, தபால் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:'ஸ்மார்ட்' போன்களில், 'மொபைல் ஆப்' வாயிலாக பணம் அனுப்பும் வசதி வந்ததால், அத்திட்டம் முடங்கியுள்ளது. இதனால், மொபைல் மணி டிரான்ஸ்பர் சேவையை நிறுத்த வாய்ப்பு உள்ளது. எனினும், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வரவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

மூலக்கதை