டி.டி.வி.தினகரன் அமைப்பு கொடிக்கு எதிராக வழக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட்டு அனுமதி

PARIS TAMIL  PARIS TAMIL
டி.டி.வி.தினகரன் அமைப்பு கொடிக்கு எதிராக வழக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட்டு அனுமதி

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற அமைப்பை மதுரையில் நேற்று முன்தினம் டி.டி.வி.தினகரன் தொடங்கினார். அப்போது அந்த அமைப்புக்கான கொடியையும் அவர் வெளியிட்டார். அந்த கொடி, அ.தி.மு.க. கொடியை போல உள்ளதாக கூறி, சென்னை ஐகோர்ட்டில் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி, அ.தி.மு.க.வின் கொடியை போல கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்தில் உள்ளது. அ.தி.மு.க.வின் கொடியை போல வடிவமைப்பை கொண்ட கொடியை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று எங்கள் கட்சியின் 4-வது விதி தெளிவாக கூறுகிறது.

இழப்பீடு

எனவே, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உருவாக்கியுள்ள புதிய கொடியை பயன்படுத்த தடை விதிக்கவேண்டும். அ.தி.மு.க.வின் கொடியில் உள்ள நிறங்களைப் பயன்படுத்தியதற்காக, ரூ.25 லட்சம் எங்களுக்கு இழப்பீடு வழங்க டி.டி.வி.தினகரனுக்கு உத்தரவிட வேண்டும். இந்த சிவில் வழக்கை தொடர எனக்கு அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சி.வி. கார்த்திக்கேயன், ‘அ.தி.மு.க. வின் கட்சிக்கொடி தொடர்பாக ஒரு தமிழ் மற்றும் ஒரு ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் செய்யவேண்டும். அதன்பிறகு இதுதொடர்பாக சிவில் வழக்கை மனுதாரர் தொடரலாம்’ என்று அனுமதியளித்து உத்தரவிட்டார்.
 

மூலக்கதை