விமானத்தில் இருந்து கொட்டிய 3 டன் தங்கம்

தினமலர்  தினமலர்
விமானத்தில் இருந்து கொட்டிய 3 டன் தங்கம்

மாஸ்கோ: சைபீரியாவின், யாகுஸ்க் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இருந்து, 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி மற்றும் வைரக் கற்கள், மழை போல் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரஷ்யாவின் சுகோட்கா பகுதியில் உள்ள குபோல் சுரங்கத்தை, கனடா நாட்டைச் சேர்ந்த சுரங்க நிறுவனம் பராமரிக்கிறது. இந்த சுரங்கத்தில் இருந்து, வெட்டி எடுக்கப்பட்ட தங்கம், வெள்ளி கட்டிகள் மற்றும் வைரக் கற்கள், கனடாவுக்கு எடுத்துச் செல்ல, சரக்கு விமானத்தில் ஏற்றப்பட்டன. வழியில், சைபீரியாவின் யாகுஸ்க் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக, அந்த விமானம் நேற்று முன்தினம் தரையிறங்கியது.

மீண்டும் புறப்பட்டபோது, சரக்கு விமானத்தின் கதவு திறந்ததால், உள்ளேயிருந்த, 3,000 கிலோ எடையுள்ள, 172 தங்கக் கட்டிகள், வெள்ளி கட்டிகள் மற்றும் வைரக் கற்கள், ஓடுபாதையில் கொட்டின. இது குறித்து, விமானிக்கு தகவல் அளித்ததையடுத்து, 12 கி.மீ., தொலைவில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இவை அனைத்தும் சேகரிக்கப்பட்டதாக, சுரங்க நிறுவனம் தெரிவித்தது.

மூலக்கதை