சத்தீஸ்கரில் 5 ரூபாய் உணவு திட்டம்; ஏப்.,1 முதல் அமல்

தினமலர்  தினமலர்
சத்தீஸ்கரில் 5 ரூபாய் உணவு திட்டம்; ஏப்.,1 முதல் அமல்

ஜாஞ்ச்கிர்: சத்தீஸ்கர் மாநிலத்தில், ஏழை தொழிலாளர்களுக்காக, ஏப்., 1 முதல், ஐந்து ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டம் துவங்கப்படும் என, அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

வளர்ச்சி பணி :

சத்தீஸ்கரில், முதல்வர், ரமண் சிங் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டில், ராய்ப்பூர், துர்க், பிலாஸ்பூர், ஜாஞ்ச்கிர் - சம்பா, கோர்பா, உள்ளிட்ட, 10 மாவட்டங்களில், 'பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொழிலாளர் அன்னதான திட்டம்' செயல்படுத்தப்படும் என, முதல்வர் அறிவித்து இருந்தார்.

நேற்று, ஜாஞ்ச்கிர் - சம்பா மற்றும் கோர்பா மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், முதல்வர், ரமண் சிங் கூறியதாவது: தொழிலாளர்கள் அதிகளவில் உள்ள, இந்த இரண்டு மாவட்டங்களிலும், ஏப்., 1 முதல், 'பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொழிலாளர் அன்னதான திட்டம்' செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில், பயனடைய விரும்பும் தொழிலாளர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

சிறப்பு முகாம் :

பதிவு செய்த தொழிலாளர்களுக்கு, ஐந்து ரூபாய்க்கு, உணவு வழங்கப்படும். அவர்கள் விரும்பினால், பாத்திரத்திலும் வாங்கிச் செல்லலாம், இந்த மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி, அதிகளவில் தொழிலாளர்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை