விரைவில் அமையுமா மேற்கு புறவழிச்சாலை; வேகமெடுக்கிறது வேலை! நிலம் கையகப்படுத்த நோட்டீஸ் வினியோகம்!

தினமலர்  தினமலர்
விரைவில் அமையுமா மேற்கு புறவழிச்சாலை; வேகமெடுக்கிறது வேலை! நிலம் கையகப்படுத்த நோட்டீஸ் வினியோகம்!

கோவையில் மேற்குப் புறவழிச்சாலைத்திட்டத்தை நிறைவேற்ற, 320 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதை அடுத்து, கையகப்படுத்த வேண்டிய நிலங்களுக்கு நோட்டீஸ் வினியோகிக்கும் பணி துவங்கியுள்ளது.
கோவை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, மேற்கு புறவழிச்சாலைத் திட்டத்தை, கடந்த 2010ல், முந்தைய தி.மு.க., அரசு அறிவித்தது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது; ஆனால், நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை; ஆட்சி மாற்றத்துக்குப் பின், இச்சாலையின் நீளம், வடிவம் மாறியது.
நிலம் கையகப்படுத்த 320 கோடி, ரோடு அமைக்க 505 கோடி என மொத்தம் 825 கோடி ரூபாய் மதிப்பில், 32.43 கி.மீ., நீளத்தில், மேற்கு புறவழிச்சாலையை செயல்படுத்துவதாக அரசு அறிவித்தது. பாலக்காடு ரோடு, மைல்கல் சுகுணாபுரத்தில் துவங்கி, சிறுவாணி ரோட்டில், செல்லப்பக்கவுண்டன் புதுார், மருதமலை ரோட்டில், பாரதியார் பல்கலை பகுதி, தடாகம் ரோட்டில், கணுவாய் வழியே, பன்னிமடை, சி.ஆர்.பி.எப்.,கடந்து, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் முடியும்.
தற்போது நிலம் கையகப்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், அதற்கான பணிகள் துவங்கியுள்ளன. சாலை அமைக்கத் தேவைப்படும் 355 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்து ஆலோசித்தனர். நிலம் கையகப்படுத்தும் பணிக்காக, சிறப்பு தாசில்தார்கள், ராஜா, முருகானந்தம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுக்கரை, குனியமுத்துார், சுண்டக்காமுத்துார், பேரூர், செட்டிபாளையம், வடவள்ளி, நரசிம்மநாயக்கன்பாளையம், கூடலுார், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், சித்திரைச்சாவடி, கலிக்கநாயக்கன்பாளையம், மாதம்பட்டி, தீத்திபாளையம், கவுண்டம்பாளையம், சோமையம்பாளையம் ஆகிய 16 வருவாய் கிராமங்களில், நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. நில உரிமையாளர்களுக்கு, நோட்டீஸ் கொடுக்கும் பணியும் துவங்கி விட்டது.
திட்டம் அறிவிக்கப்பட்டு, ஏற்கனவே பல ஆண்டுகளாகியும், பணி துவங்காததால், மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
எனவே, நிலம் கையகப்படுத்தும் பணியை விரைவாக முடிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக, எந்தவொரு தடையும் ஏற்படாத வகையில், நிலம் கையகப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க, வருவாய்த்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.திட்டமிட்டபடி பணிகள் முடிந்தால், இந்த ஆண்டிலேயே சாலை அமைக்கும் பணி துவங்கி விடும்.
நில மதிப்பு எகிறும்!
கோவையில், கடந்த பல ஆண்டுகளாக, ரியல் எஸ்டேட் படுமந்தமாகவுள்ளது. வழிகாட்டி மதிப்பு உயர்ந்த பின், பத்திரப்பதிவும், மிகவும் குறைந்து விட்டது. சந்தை மதிப்பும், தேக்க நிலையிலேயே உள்ளது. மேற்கு புறவழிச்சாலைக்கு நோட்டீஸ் கொடுக்கும் பணி துவங்கியதும், இந்த பகுதிகளில் நிலத்தின் மதிப்பு, பல மடங்கு அதிகமாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.-நமது நிருபர்-

மூலக்கதை