மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் 86 சதவீத வழக்குகளுக்கு தீர்வு

தினமலர்  தினமலர்
மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் 86 சதவீத வழக்குகளுக்கு தீர்வு

சென்னை : ''மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில், 86 சதவீத வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது,'' என, மாநில நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி, தமிழ்வாணன் கூறினார்.
சென்னை, பாரிமுனையில் உள்ள, மாநில நுகர்வோர் நீதிமன்ற வளாகத்தில், 'உலக நுகர்வோர் தினம் 2018' விழா, நேற்று முன்தினம் நடந்தது. விழாவுக்கு, தலைமை வகித்து, மாநில நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி, தமிழ்வாணன் பேசியதாவது:
மாநில நுகர்வோர் நீதிமன்றம் துவங்கப்பட்டதில் இருந்து, 28 ஆயிரத்து, 716 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்தாண்டு, பிப்., 28 வரை, 24 ஆயிரத்து, 827 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது, 86 சதவீதம்.தமிழகம் முழுவதும், மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில், 1 லட்சத்து, 17 ஆயிரத்து, 806 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.இதில், 1 லட்சத்து, 8 ஆயிரத்து, 556 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது, 92 சதவீதம்.
வழக்குகளை விரைவாக முடிக்கவும், நுகர்வோர் வழக்கு தாக்கல் செய்யும் போதும், விசாரணையின் போதும், உரிய ஆவணங்கள் முழுவதுமாக தாக்கல் செய்ய வேண்டும்.ஆவணங்கள் தாக்கல் செய்ய, கால அவகாசம் கேட்க கூடாது. ஆவணங்கள் முழுமையாக சமர்ப்பிக்கப்பட்டால் தான், கால தாமதமின்றி, வழக்கு விரைவாக நடத்தப்பட்டு தீர்வு காண முடியும்.
நுகர்வோர் நீதிமன்றங்களின் செயல்பாடு மற்றும் மனுத் தாக்கல் செய்யும் நடைமுறைகள் குறித்து, நுகர்வோர் சேவை மையம், வழக்கறிஞர், பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், விழிப்புணர்வு வழங்குவது அவசியம். இவ்வாறு தமிழ்வாணன் பேசினார்.

மூலக்கதை