குசால் பெரேரா 61, திசாரா பெரேரா 58 வங்கதேசத்துக்கு 160 ரன் இலக்கு

தினகரன்  தினகரன்

கொழும்பு : இலங்கை அணியுடனான நிடஹாஸ் டிராபி முத்தரப்பு டி20 தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில், வங்கதேச அணிக்கு 160 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலங்கையில் நடைபெற்று வரும் இந்த தொடரில், ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, 4 லீக் ஆட்டத்தில் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இலங்கை, வங்கதேச அணிகள் தலா 3 போட்டிகளில் விளையாடிய நிலையில் தலா 1 வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன. இந்த நிலையில், இரு அணிகளும் தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று மோதின. கொழும்பு, ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீசியது. அந்த அணியில் அபு ஹைதருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் இடம் பெற்றார். இலங்கை அணியில் லக்மல், சமீரா நீக்கப்பட்டு இசுரு உடனா, அமிலா அபான்சோ சேர்க்கப்பட்டனர்.குணதிலகா, குசால் மெண்டிஸ் இருவரும் இலங்கை இன்னிங்சை தொடங்கினர். குணதிலகா 4 ரன் எடுத்து ஷாகிப் பந்துவீச்சில் வெளியேற, மெண்டிஸ் 11 ரன் எடுத்து முஸ்டாபிசுர் வேகத்தில் சர்க்கார் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த தரங்கா 5 ரன் எடுத்து ரன் அவுட்டாக, ஷனகா முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஜீவன் மெண்டிஸ் 3 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். இலங்கை அணி 8.1 ஓவரில் 41 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறிய நிலையில், குசால் பெரேரா, கேப்டன் திசாரா பெரேரா ஜோடி 6வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 97 ரன் சேர்த்தது. குசால் பெரேரா 61 ரன் (40 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), திசாரா பெரேரா 58 ரன் (37 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன் குவித்தது. உடனா 7, தனஞ்ஜெயா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச பந்துவீச்சில் முஸ்டாபிசுர் 2, ஷாகிப், ருபெல், மிராஸ், சர்க்கார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது.

மூலக்கதை