ராமநாதபுரம் மாவட்டத்தில் வரலாறு காணாத வறட்சி

தினமலர்  தினமலர்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. புயல் எச்சரிக்கை இருந்தும் மழை இல்லாததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் கடலோர பகுதிகளை அதிகமாக கொண்டது.
கடலாடி, சாயல்குடி, முதுகுளத்துார், கமுதி, பரமக்குடி, நயினார்கோவில் ராமநாதபுரத்தை சுற்றியுள்ள கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் விவசாயம் உள்ளது. விவசாயிகள் மழையை நம்பி தொடர்ந்து பயிர் செய்து வருகின்றனர். ஆனால் தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக போதுமான மழை பெய்யாததால், பயிர்கள் விளைச்சல் இல்லாமல், காய்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
சராசரி மழையளவு: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடர்ந்து பருவமழை குறைந்து வருகிறது. 2013 ல் 617.91 மி.மீ., 2014 ல் 631.24 மி.மீ., 2015 ல் 111.4 மி.மீ., 2016 ல் 348.6 மி.மீ., 2017 ல் 599.9 மி.மீ., அளவில் மட்டுமே மழை பொழிவு இருந்தது. சராசரி மழையளவு இல்லாததால், விவசாயிகள் பயிர்கள் கருகி தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
புயல் ஏமாற்றம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒக்கி புயல் காரணமாக பெரிய அளவில் மழை பொழிவு இல்லை. தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டும், பெரிய அளவில் மழை கிடைக்கவில்லை. திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் புயல் காரணமாக மழை பெய்துள்ளது. துாத்துக்குடியில் 200.8 மி.மீ., மழை நேற்று முன் தினம் பெய்துள்ளது.
திருநெல்வேலி செங்கோட்டையில் 101 மி.மீ., மழை பெய்துள்ளது. ராமநாதபுரத்தில் மார்ச் 12 ல் மட்டுமே சிறிய அளவில் மழை பெய்துள்ளது. மண்டபம் பகுதியில் மட்டுமே அதிகபட்சமாக 24.40 மி.மீ., மழை பெய்துள்ளது. நேற்று முன் தினம் மார்ச் 13 ல் எந்தப்பகுதியில் மழை பெய்யவில்லை. நேற்றும் மாவட்டத்தில் பெரிய அளவில் மழை இல்லை. புயல் சின்னம் இருந்தும் ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு மழை ஏமாற்றத்தை தந்துள்ளது.
மரங்கள் கருகின: தொடர்ந்து மழை பொழிவு குறைந்ததால், வறட்சியை தாங்கி வளரும் பனை மரங்கள் கூட கருகியுள்ளன. ஒரு சில பகுதிகளை தவிர பெரும்பான்மையான பகுதிகளில், குறைந்த நீரில் பயிர் செய்யப்படும் எள்ளு கூட விளைச்சல் இல்லை, விவசாயிகள் வரலாறு காணாத வறட்சியில் சிக்கி தவித்து வருகின்றனர்.

மூலக்கதை