தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்தியா ஹாட்ரிக் வெற்றி: தசைபிடிப்பை பொருட்படுத்தாமல் விளையாடினேன்: கேப்டன் கோஹ்லி பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்தியா ஹாட்ரிக் வெற்றி: தசைபிடிப்பை பொருட்படுத்தாமல் விளையாடினேன்: கேப்டன் கோஹ்லி பேட்டி

கேப் டவுன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கேப் டவுனில் நேற்று நடைபெற்ற 3வது ஒரு நாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்களை குவித்தது. கேப்டன் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 160 ரன்களும் (159 பந்துகள், 12 பவுண்டரி, 2 சிக்சர்), ஷிகார் தவான் 76 ரன்களும் (63 பந்துகள், 12 பவுண்டரி) விளாசினர்.

டுமினி 2, ரபாடா, கிறிஸ் மோரிஸ், பெலுக்வாயோ, இம்ரான் தாஹிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் பேட் செய்த தென் ஆப்ரிக்கா 40 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

டுமினி 51, கேப்டன் எய்டன் மார்க்ரம் 32, டேவிட் மில்லர் 25 ரன்கள் எடுத்தனர். குல்தீப் யாதவ், சஹால் இருவரும் தலா 9 ஓவர்கள் பந்து வீசினர்.

இதில், குல்தீப் யாதவ் (1 மெய்டன்) 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களையும், சஹால் 46 ரன்களை விட்டு கொடுத்து 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பும்ரா 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், 3-0 என்ற கணக்கில் இந்தியா வலுவான முன்னிலை பெற்றுள்ளது.
முன்னதாக முதல் 2 ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியா மிக எளிதாக வெற்றி பெற்றிருந்தது.

4வது ஒரு நாள் போட்டி, வரும் 10ம் தேதி (நாளை மறுநாள்) ஜோஹன்னஸ்பர்க் நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் மாலை 4. 30 மணிக்கு நடைபெறுகிறது.   ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில், ‘’தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம் எங்களுக்கு நல்ல முறையில் தொடங்கவில்லை (ஒரு நாள் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-1 என தோல்வி). தற்போது ஒரு நாள் தொடரில் வெற்றி பெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது.



330 ரன்கள் வரை எடுக்க திட்டமிட்டிருந்ேதாம். ஆனால் 30வது ஓவருக்கு பிறகு போட்டி கடுமையான முறையில் மாற ெதாடங்கியது.

இதனால் இலக்கை உடனடியாக 280-290 ரன்கள் என குறைத்து கொண்டோம். ஷிகார் தவானுடன் மீண்டும் ஒரு முறை எனக்கு நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்துள்ளது (விராட் கோஹ்லி-ஷிகார் தவான் ஜோடி 2வது விக்கெட்டிற்கு 140 ரன்கள் சேர்த்தது).

அதுமட்டுமின்றி கடைசி கட்டத்தில் புவனேஸ்வர்குமார் உடனான பார்ட்னர்ஷிப்பும் சிறப்பு வாய்ந்தது (விராட் கோஹ்லி-புவனேஸ்வர் குமார் ஜோடி 7வது விக்கெட்டிற்கு 67 ரன்கள் சேர்த்தது). பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது தசைபிடிப்பால் சிரமப்பட்டேன்.



எனினும் 300 ரன்களை கடக்க வேண்டுமானால், நான் கடைசி வரை நிலைத்து நின்று விளையாடுவது அவசியம் என்பதை அறிந்திருந்தேன். எப்போதும் யாரேனும் ஒருவராவது கடைசி வரை நின்று பேட்டிங் செய்ய வேண்டியது அவசியம். ஒரு கேப்டனாக அதை செய்திருப்பது எனக்கு அற்புதமான உணர்வை தருகிறது.

நாங்கள் தொடரை இழந்து விடக்கூடாது. எனவே 4வது ஒரு நாள் போட்டியில் இன்னும் தீவிரமாக விளையாடுவோம்’’ என்றார்.

சாதனையை நெருங்கும் இந்தியா
6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 3-0 என முன்னிலை பெற்றிருப்பதன் மூலம் குறைந்தபட்சம் தொடரை சமன் செய்வதையாவது இந்தியா உறுதி செய்துவிட்டது.

எஞ்சிய 3 போட்டிகளில் ஒன்றில் வென்றால் கூட இந்தியா தொடரை கைப்பற்றுவதுடன், ஐசிசி ஒரு நாள் தரவரிசையில் நிரந்தரமாக முதலிடத்துக்கு முன்னேறும். அத்துடன் தென் ஆப்ரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிரான இரு தரப்பு ஒரு நாள் தொடரில் முதல் முறையாக வெற்றி என்ற மகத்தான சாதனையையும் படைக்கும்.

தென் ஆப்ரிக்க வீரர்களின் மோசமான பார்ம், காயம் காரணமாக முன்னணி வீரர்கள் விலகியிருப்பது, இந்திய வீரர்களின் அசத்தல் பார்ம் உள்ளிட்ட அம்சங்களால் இதற்கான வாய்ப்புகள் மிக பிரகாசமாகவே உள்ளது.

அசத்தும் நால்வர் கூட்டணி இந்திய ரிஸ்ட் ஸ்பின்னர்களான சஹாலும், குல்தீப் யாதவும் கேப்டன் விராட் கோஹ்லியின் துருப்பு சீட்டுகளாக உருவெடுத்துள்ளனர்.

அவர்களின் பந்தை எப்படி எதிர்கொள்வது? என்பது தெரியாமல், தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருகின்றனர். நடப்பு ஒரு நாள் தொடரில் இதுவரையிலான 3 போட்டிகளின் முடிவில், சஹால் 11 விக்கெட்கள், குல்தீப் யாதவ் 10 விக்கெட்கள் என இருவரும் இணைந்து 21 விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் கேப்டன் விராட் கோஹ்லி, ஷிகார் தவான் ஆகியோரும் ரன் மெஷின்களாக உருவெடுத்துள்ளனர்.

நடப்பு ஒரு நாள் தொடரில் இதுவரையிலான 3 போட்டிகளின் முடிவில், விராட் கோஹ்லி 318 ரன்களையும், ஷிகார் தவான் 162 ரன்களையும் குவித்துள்ளனர்.

.

மூலக்கதை