தடைசெய்யப்பட்ட இயந்திர பயன்பாடு அதிகரிப்பு:கொடைக்கானலில் தொடரும் விதிமீறல்

தினமலர்  தினமலர்
தடைசெய்யப்பட்ட இயந்திர பயன்பாடு அதிகரிப்பு:கொடைக்கானலில் தொடரும் விதிமீறல்

கொடைக்கானல்: கொடைக்கானலில் தடைசெய்யப்பட்ட இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் நிலச்சரிவுக்கான அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்பகனூர் பகுதியில் நடைபெறும் கட்டுமான பணிகளால் அபாய நிலை உள்ளது.கொடைக்கானல் உட்பட மலைப்பிரதேச நகரங்கள், கிராமங்களில் மண் அள்ளும் இயந்திரங்கள், கம்ப்ரஸர், போர்வெல் போன்ற இயந்திரங்களை பயன்படுத்த அவசிய இடங்களில் பயன்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. தற்போது எல்லாவற்றையும் மீறி பல இடங்களில் பணிகள் நடைபெறுகின்றது. அரசு சார்ந்த வேலைகளுக்கு மட்டுமே இம்மாதிரியான பணிகள் மேற்கொள்ள உத்திரவிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நகர் மற்றும் கிராம பகுதிகளில் தடைசெய்யப்பட்ட இயந்திர பணிகள் தாரளமாக நடைபெறுகின்றது.
வருவாய்த்துறையினருக்கு கவனிப்பு மற்றும் ஆசிர்வாதத்துடன் நடைபெற்று வருவதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தடைசெய்யப்பட்ட இயந்திர பணிகளை மேற்கொள்வோர் வருவாய்த்துறையினரின் அனுமதியோடு செய்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
நில அதிர்வுக்கு வாய்ப்பு
மேடான பகுதிகளை கரைக்க மண் அள்ளும் ஜேசிபி இயந்திரங்களால் பணிகளை செய்கின்றனர். வெடி வைக்காமல் கம்ப்ரஸர் மூலமாக கல் உடைக்கும் செயல்கள் நடக்கின்றன. இதனால் நகரில் கனிமவளம் கொள்ளை போகும் நிலை உள்ளது. இதுபோன்று நிலத்தடி நீரை உறிஞ்சும் போர்வெல் பணிகளையும் ஆங்காங்கே மேற்கொள்கின்றனர். இயந்திரங்களை பயன்படுத்தினால் பல இடங்களில் நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மீண்டும் மீண்டும் பணிகள் நடப்பதால் சுற்றுலாநகர் பொலிவை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது கோடை பருவமழை துவங்கியுள்ளதால் கனமழையின் போது பல இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல தடைசெய்யப்பட்ட இயந்திரங்களின் பயன்பாட்டால் இந்தவாய்ப்பு மேலும் அதிகரிக்கும் சூழல் உள்ளது. எப்பெக்ட் அமைப்பை சேர்ந்த வீரா கூறியதாவது: கொடைக்கானலில் இயந்திரங்களின் பயன்பாட்டை தடை செய்து கனம, இயற்கை வளங்களை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இம்மாதிரியான பணிகள் தொடர்ந்தால் இயற்கை அழிந்து நிலச்சரிவு ஏற்படும் என்றார்.

மூலக்கதை