அலங்கோலமாகும் தேசிய நெடுஞ்சாலை.. கலெக்டர் ஆய்வு செய்தால் பரவாயில்லை

தினமலர்  தினமலர்
அலங்கோலமாகும் தேசிய நெடுஞ்சாலை.. கலெக்டர் ஆய்வு செய்தால் பரவாயில்லை

திருப்பூர் : அவிநாசி- - அவிநாசிபாளையம் தேசிய நெடுஞ்சாலை பணியில், ஆக்கிரமிப்பு அகற்றாமல் ரோடு அமைத்தல், குட்டை மூடப்படுவது என பல குளறுபடிகளுடன் பணி நடக்கிறது.

அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரையிலான, 31.8 கி.மீ., துாரம் ரோடு, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு, 167 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.திருப்பூர் நகரின் பிரதான ரோடுகளான, அவிநாசி ரோடு, குமரன் ரோடு, காமராஜர் ரோடு மற்றும் தாராபுரம் ரோடுகளில், இப்பணி நடந்து வருகிறது.தேசிய நெடுஞ்சாலைக்கு இணையாக, நகரின் பிரதான ரோடுகள் தரம் உயரும் என மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால், நகரின் குறுகலான ரோடுகளில், அளவுக்கதிகமான வாகன போக்குவரத்து உள்ள நிலையில், இந்த ரோடுகளில், திட்ட வடிவமைப்பு அடிப்படையிலும், ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாக பணிகள் மேற்கொள்ளாமல், பல்வேறு குளறுபடிகளுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவிநாசி ரோட்டில், குடிநீர் குழாய்கள், மின் கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதோடு, ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல், ரோடு மேம்படுத்தும் பணி மட்டுமே நடக்கிறது.குமரன் ரோடு, காமராஜர் ரோடு பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

தாராபுரம் ரோட்டில், விதிமுறைகளை மீறி, மையத்தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த ரோட்டில், தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு இருபுறமும் இடம் இருந்தும், திட்டமிட்டபடி மரங்கள், மின் கம்பங்கள், ஆக்கிரமிப்பு, இப்படி எதுவும், அகற்றப்படாமல், பழைய ரோடு மட்டுமே மேம்படுத்தப்படுகிறது. தாராபுரம் ரோட்டில் அடிக்கடி குழாய் உடைந்து, குடிநீர் வெளியேறி ரோடு பழுதடைந்து வரும் நிலையில், சீரமைக்காமல், அப்படியே ரோடு அமைக்கப்படுகிறது. பல இடங்களில், பாதாள சாக்கடை மேனுவல் உயர்த்தாமல், அப்படியே மூடப்படுகிறது. குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிக்காக, மீண்டும் புதிய ரோடு தோண்டப்படும் அபாயம் உள்ளது.

அனுப்பர்பாளையம் உள்ளிட்ட ரோட்டிற்கு குறுக்கே அமைக்கப்படும், சிறிய பாலங்களும், மழை வெள்ள நீர் வெளியேறும் வகையில், சரியான திட்டமிடல் இல்லாமல் கட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் வகையில், வடக்கு அவிநாசிபாளையம், வேலம்பட்டியில், நான்கு ஏக்கர் பரப்பளவிலுள்ள தண்ணீர் தேங்கும் குட்டை மூடப்பட்டு வருகிறது.

நகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோடுகளில், மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதால், கடும் போக்கு வரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.எனவே, தேசிய நெடுஞ்சாலை பணிகளை உயர் அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் முழுமையாக ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, திட்ட வடிவமைப்பு அடிப்படையில், தரமாகவும், விரைவாகவும் பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மூலக்கதை