தனியார் விதை, நாற்று விற்பனை நர்சரிகளுக்கு எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
தனியார் விதை, நாற்று விற்பனை நர்சரிகளுக்கு எச்சரிக்கை

அம்பத்துார் : தனியார் நர்சரிகளில், அரசு அனுமதியின்றி, உணவுப்பொருள் தொடர்பான விதை மற்றும் நாற்றுகளை விற்பனை செய்யக் கூடாது என, ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஏராளமான மலர் மற்றும் அலங்கார செடிகள் விற்பனை செய்யும் நர்சரிகள் உள்ளன.அவற்றில், அலங்கார செடிகளுடன், மக்கள் அன்றாடம் உணவுக்காக பயன்படுத்தும் பழம், காய்கறி, கீரை உற்பத்திக்கான விதை மற்றும் நாற்று ஆகியவையும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், அவை தரமானதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அவற்றால் மக்களுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படும் என, அச்சமும் உருவாகி உள்ளது.

இந்நிலையில், அந்த நர்சரிகளில், சென்னை மண்டல விதை ஆய்வு துணை இயக்குனர், முத்து ராமன் தலைமையில், விதை ஆய்வாளர் அனிதா மற்றும் ஆய்வுத்துறை அலுவலர்கள், இரு தினங்களாக ஆய்வு மேற்கொண்டுஉள்ளனர். அரசு அனுமதி பெற்ற பின்னரே, நர்சரி உரிமையாளர்கள், பழம், காய்கறி விதை மற்றும் நாற்றுகளை விற்பனை செய்ய வேண்டும்.

அனுமதியின்றி விற்பனை செய்தால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரித்தனர். நர்சரி உரிமையாளர்கள், அதற்குரிய ஆவணங்களுடன், 1,000 ரூபாய் கட்டணம் செலுத்தி, சென்னை, பிராட்வே, குறளகம், 2வது தளத்தில் உள்ள, விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் அனுமதி பெறலாம்.

விவசாயி மற்றும் நுகர்வோருக்கு, தரமான விதைகள் கிடைக்க வேண்டும். அதற்காக, விதை ஆய்வு நடத்தி, மாதிரிகள் சேகரித்து, அவற்றை சோதனை செய்கிறோம். அப்போது, 'முளைப்பு' திறன் குறைந்த விதைகள் விற்பனை செய்யப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுப்போம்.-விதை ஆய்வுத்துறை அலுவலர்

மூலக்கதை