நிடஹாஸ் முத்தரப்பு டி20 தொடரில் பைனலில் இந்தியாவுடன் மோதுவது யார்?: இலங்கை-வங்க தேசம் இன்று பலப்பரீட்சை

தினகரன்  தினகரன்

கொழும்பு : நிடஹாஸ் முத்தரப்பு டி-20 தொடரில் இந்தியாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடப்போவது யார் என்பதை நிர்ணயிப்பதற்கான வாழ்வா, சாவா ஆட்டத்தில் இலங்கை, வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் மோதும் நிடஹாஸ் முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் நடக்கிறது. முதல் லீக்  ஆட்டத்தில் இலங்கையிடம் தோற்ற இந்திய அணி அடுத்த 3 போட்டியில் வென்றது. நேற்று முன்தினம் நடத்த வங்கதேசத்துடனான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது. கேப்டன் ரோகித் ஷர்மா 89 ரன் (61 பந்து), ரெய்னா 47 ரன் (30 பந்து), தவான் 35 ரன் (27 பந்து) எடுத்து அசத்தினர். அடுத்து களமிறங்கிய வங்கதேச அணி வெற்றிக்காக கடுமையாக போராடியது. ஆனாலும், வாஷிங்டன் சுந்தர், சாஹல் சுழல் கூட்டணி கட்டுக்கோப்பாக பந்துவீச வங்கதேச அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்து தோற்றது. வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர் வீசி 22 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். சாஹல், முகமது சிராஜ், சர்துல் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இலங்கை, வங்கதேச அணிகளை பொறுத்த வரையில் தலா 1 வெற்றியுடன் உள்ளன. கொழும்புவில் இன்று நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஏற்கனவே லீக் ஆட்டத்தில் இலங்கையை வங்கதேச அணி வீழ்த்தியுள்ளதால் நம்பிக்கையுடன் உள்ளது. மேலும், அந்த அணியின் ஆல்ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் காயம் குணமான நிலையில் அணிக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலத்தை அளிக்கிறது. பந்துவீச்சில் சொதப்பி வந்த வங்கதேசம், ஷாகிப்பின் வரவால் தெம்படைந்துள்ளது. இலங்கை சொந்த மண்ணில் விளையாடுவதால் கூடுதல் நெருக்கடியுடன் காணப்படுகிறது. வாழ்வா, சாவா போட்டியில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என இப்போட்டி பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. இறுதிப் போட்டி வரும் 18ம் தேதி நடக்கிறது.

மூலக்கதை