இரட்டை சதம் அடித்து சாதித்தார் வாசிம் ஜாபர்

தினகரன்  தினகரன்

நாக்பூர் : இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த விதர்பா அணியின் வாசிம் ஜாபர், 285 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் பல்வேறு சாதனைகளையும் படைத்தார். ரஞ்சி சாம்பியன் விதர்பா, இதர இந்தியா அணிகளுக்கு இடையேயான இரானி கோப்பை போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த விதர்பா, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 289 ரன் குவித்தது. வாசிம் ஜாபர் 113, கணேஷ் சதீஷ் 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 2ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் ஜாபர் தொடர்ந்து தனது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது 8வது இரட்டை சதத்தை அடித்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு சாதனைகளையும் படைத்தார். ஆசிய கண்டத்திலேயே 250 ரன்னுக்கு மேல் அடித்த வயதான வீரர் (40+) என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். முதல் தர கிரிக்கெட்டில் 18,000 ரன் இலக்கை எட்டும் 6வது வீரர் ஆனார். இரானி கோப்பையில் அதிக ரன் எடுத்த முரளிவிஜய் (266 ரன்) சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். இத்துடன் 285 ரன்களுடன் ஜாபர் ஆட்டமிழக்காமல் உள்ளார். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த கணேஷ் 120 ரன்னில் ஆட்டமிழந்தார். 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் விதர்பா அணி 3 விக்கெட் இழப்புக்கு 598 ரன்களுடன் உள்ளது. ஜாபர் 285, வாங்கடே 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

மூலக்கதை