சஹால், குல்தீப் யாதவை தேர்வு செய்தது சரியான முடிவு என நிரூபிக்கப்பட்டுள்ளது: தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் மகிழ்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சஹால், குல்தீப் யாதவை தேர்வு செய்தது சரியான முடிவு என நிரூபிக்கப்பட்டுள்ளது: தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் மகிழ்ச்சி

மும்பை: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், முதல் 3 போட்டிகளிலும் வென்று, 3-0 என இந்தியா வலுவான முன்னிலையை பெற்றுள்ளது. நடப்பு தொடரில், மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி பந்து வீசும் இந்தியாவின் ரிஸ்ட் ஸ்பின்னர்களான சஹால் (11 விக்கெட்கள்), குல்தீப் யாதவ் (10 விக்கெட்கள்) இணைந்து மொத்தமாக 21 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

அவர்களின் பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது? என்பது தெரியாததால், தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் எதிர்ப்பே இன்றி சரணடைந்து வருகின்றனர். அனுபவம் வாய்ந்த ஃபிங்கர் ஸ்பின்னர்களான அஸ்வின், ஜடேஜா கூட்டணிக்கு பதிலாக, ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு வரும் சஹால்-குல்தீப் யாதவ் கூட்டணி, தங்களை தேர்வு செய்தது சரிதான் என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடி வருகின்றனர்.



 இது குறித்து இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம். எஸ். கே. பிரசாத் கூறுகையில், ‘’சஹால், குல்தீப் யாதவின் செயல்பாடு எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. ஏனெனில் அவர்கள் அதிக விக்கெட்களை வீழ்த்துவார்கள் என்பதில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை உள்ளது.

முதல் 3 ஒரு நாள் போட்டிகளில் அவர்கள் 21 விக்கெட்களை வீழ்த்தியிருப்பது வியக்கதக்க அம்சம். அணி நிர்வாகம் மற்றும் கேப்டனிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு காரணமாக, அவர்களது நம்பிக்கையின் அளவு ஒவ்வொரு போட்டிக்கும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

நம்மிடம் தரமான 6-7 வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அத்துடன் ஸ்பின்னர்களின் அடிப்படையை அதிகரிப்பது குறித்தும் நாங்கள் யோசித்தோம்.

ரிஸ்ட் ஸ்பின்னர்களை ஆதரிப்பது என்பது கடினமான முடிவு.

ஆனால் எங்களின் முடிவு சரிதான் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணிலும் சிறப்பாக விளையாடுவோம். அங்கு வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் வழங்கப்பட்டால், என்ன செய்வது? என்பது எங்களுக்கு தெரியும்’’ என்றார்.


 2019 உலக கோப்பையில் சஹால்-குல்தீப் யாதவ் கூட்டணி களமிறக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த எம். எஸ். கே. பிரசாத், ‘’இளம் வீரர்களுக்கு நாங்கள் அதிக வாய்ப்புகளை தருகிறோம். எந்த தொடர் வந்தாலும், சிறந்த அணி கலவை பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.

உலக கோப்பை தொடருக்கு இன்னும் 16 மாதங்கள் இருக்கிறது. எனவே யார் விளையாட போகிறார்கள்? யார் விளையாட மாட்டார்கள்? என்பதை பற்றி தற்போது பேசுவது என்பது, முன்கூட்டியே பேசுவதை போன்றது’’ என்றார்.



 முன்னதாக தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என இந்தியா இழந்தது. இதில், முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ரஹானேவின் இடத்தில் விளையாடிய ரோகித் சர்மா தடுமாறினார்.

ரஹானேவை சேர்க்க வேண்டும் என்று வெளியில் இருந்து கொடுக்கப்பட்ட குரல் களுக்கு 3வது டெஸ்ட் போட்டியில்தான் பலன் கிடைத்தது. அத்துடன் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய புவனேஸ்வர் குமார், திடீரென 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.

எனவே ப்ளேயிங் லெவன் தேர்வு பல்வேறு விவாதங்களை உண்டாக்கியது. இது குறித்து எம். எஸ். கே. பிரசாத் கூறுகையில், ‘’வெளியில் இருந்து பேசுவது எளிதானதுதான்.



பார்ம், ஆடுகளம், நாம் எதிர்பார்க்கும் கலவை ஆகியவற்றின் அடிப்படையில்தான் ப்ளேயிங் லெவன் தேர்வு செய்யப்படுகிறது’’ என்றார்.
இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையேயான 4வது ஒரு நாள் போட்டி, ஜோஹன்னஸ்பர்க் நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை மாலை 4. 30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த மைதானத்தில்தான், டெஸ்ட் தொடரின் ஒரு போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது. 4வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில், தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றுவதுடன், ஐசிசி ஒரு நாள் தரவரிசையில் நிரந்தரமாக முதலிடத்தையும் பிடிக்கும்.

 

.

மூலக்கதை