5வது போட்டியில் 73 ரன்னில் வென்று தொடரை கைப்பற்றி அசத்தல்: 5-1 என தொடரை வெல்வோம்: இந்திய கேப்டன் கோஹ்லி நம்பிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
5வது போட்டியில் 73 ரன்னில் வென்று தொடரை கைப்பற்றி அசத்தல்: 51 என தொடரை வெல்வோம்: இந்திய கேப்டன் கோஹ்லி நம்பிக்கை

போர்ட் எலிசபெத்: இந்தியா -தென்ஆப்ரிக்கா அணிகள் இடையே 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில்  நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து இந்தியாவின். தவான், ரோகித் சர்மா  பேட்டிங்கை தொடங்கினர்.

ரோகித் சர்மா நிதானமாக ஆட தவான்  அதிரடியில்  இறங்கினார். 23 பந்தில்  8 பவுண்டரியுடன் 34 ரன் எடுத்த அவர் ரபாடாவின் பவுன்சர் பந்தில் கேட்ச் ஆனார்.

இதையடுத்து ரோகித்துடன் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். முதல் 4 போட்டியிலும் சொதப்பிய ரோகித் நேற்று பொறுப்புடன் ஆடினார்.

இருவரும் 2வது விக்கெட்டிற்கு 105 ரன் சேர்த்த நிலையில், அணியின் ஸ்கோர் 153ஆக இருந்த போது கோஹ்லி எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.

பின்னர் வந்த ரகானே 8 ரன்னில் ரன்அவுட் ஆக சிறப்பாக ஆடிய ரோகித் சதம் விளாசினார்.

ஒன்டேவில் இது அவருக்கு 17வது சதம் ஆகும். அவர்  126 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் 115 ரன் எடுத்திருந்த போது நிகிடி பந்தில் கேட்ச் ஆக அடுத்த பந்திலேயே பாண்டியா டக் அவுட் ஆனார்.   ஷ்ரேயாஸ் அய்யர் 30 ,  டோனி 13 ரன்னில் ஆட்டம் இழக்க.

50 ஓவரில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன் சேர்த்தது. புவனேஸ்வர்குமார் 19, குல்தீப் 2 ரன்னில் களத்தில் இருந்தனர். தென்ஆப்ரிக்கா தரப்பில் நிகிடி 4, ரபாடா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.   275 ரன் இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்ரிக்கா முதல் விக்கெட்டிற்கு 52 ரன் சேர்த்தது.

பும்ரா வீசிய 8வது ஓவரில் மார்க்ரம் அளித்த எளிதான கேட்ச்சை ஸ்ரேயாஸ் அய்யர் கோட்டவிட 10 ஓவரின் 4வது பந்தில் மார்க்ரம் 32 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

பின்னர் வந்த டுமினி 1, டிவில்லியர்ஸ் 6 ரன்னில் பாண்டியா பந்தில் ஆட்டம் இழந்தனர்.   அம்லா,- மில்லர் ஜோடி 4வது விக்கெட்டிற்கு 62 ரன் சேர்த்த நிலையில் ஸ்கோர்  127ஆக இருந்த போது மில்லர், சஹால் பந்தில் போல்டானார்.

மறுபுறம் சிறப்பாக ஆடி அரைசதம் விளாசிய அம்லா 71 ரன்னில் (92 பந்து, 5 பவுண்டரி) பாண்டியாவால் ரன்அவுட் செய்யப்பட்டார். இதையடுத்து தென்ஆப்ரிக்கா சரிவை சந்தித்தது.

பெலுக்வாயோ 0, ரபாடா 3, கிளாசன் 39, ஹம்சி 0 ரன்னில் ஆட்டம் இழக்க கடைசி விக்கெட்டாக மோர்னே மோர்கல் 1 ரன்னில் சஹால் பந்தில் ஆட்டம் இழந்தார். 42. 2 ஓவரில் 201 ரன்னுக்கு தென்ஆப்ரிக்கா ஆல்அவுட் ஆக 73 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்திய பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 4 , பாண்டியா, சஹால் தலா  2 , பும்ரா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

115 ரன் விளாசிய ரோகித் சர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஏற்கனவே முதல் 3 போட்டி களில் வெற்றி பெற்றிருந்த இந்தியா இந்த வெற்றி மூலம் 4-1 என தொடரை கைப்பற்றியது.

6வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (வெள்ளி) செஞ்சூரியனில் நடக்கிறது. வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி கூறியதாவது: தொடரை கைப்பற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த வரலாற்று சாதனை நிகழ்த்த வீரர்கள் கடுமையாக உழைத்தனர். தொடரை இழந்து விடக்கூடாது என்ற அழுத்தம் எங்களுக்கு இருந்தது.

ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட்டில் இருந்து எங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பித்தது.

இந்த வரலாற்று சாதனைக்கு கூட்டு முயற்சியே காரணம்.

ஒவ்வொரு தொடருக்கு பின்னரும் எங்களை மேம்படுத்துவது குறித்து உட்கார்ந்து ஆலோசனை நடத்துவோம். 5-1 என தொடரை கைப்பற்ற வேண்டும்.

அடுத்த போட்டியில் இதுவரை ஆடாத வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.   ஆட்டநாயகன் விருது பெற்ற ரோகித் சர்மா கூறியதாவது: ஆட்டநாயகன் விருதை  நீண்ட நேரத்திற்கு பின்னர் பெறுகிறேன்.

மிடில் ஓவர்களிலும் நீண்ட நாட்களுக்கு பின்னர் ஆடும் வாய்ப்பை பெற்றேன். சதம் அடிப்பதை விட அணியின் வெற்றியுடன் ஆட்டநாயகன் விருது பெறுவது கூடுதல் மகிழ்ச்சி, இன்று எனது நாளாக அமைந்தது, என்றார்.

தென்ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம் கூறியதாவது: இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடினர்.

ரன்  வேகத்தை அதிகரிக்கும் நேரங்களில் நாங்கள் விக்கெட்டை பறிகொடுத்து விட்டோம். நிகிடி  கடைசி நேரத்தில் சிறப்பாக பந்து வீசி இந்தியாவை கட்டுப்படுத்தினார்.

ஆனால் அந்தவாய்ப்பை பயன்படுத்த தவறி விட்டோம். சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள இன்னும் முன்னேற்றம் தேவை.

கடைசி போட்டியில் வென்று தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய முயற்சிப்போம், என்றார்.

26 ஆண்டுக்கு பின் வரலாற்று சாதனை:
26 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக தென்ஆப்ரிக்க மண்ணில் இந்திய அணி  ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
1992ல் அசாருதீன் தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக தென்ஆப்ரிக்கா சென்று 7 போட்டிகள் கொண்ட தொடரை 5-2 என இழந்தது.

2006ல் டிராவிட் தலைமையில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-0 எனவும், 2010ல் டோனி தலைமையில் 5 போட்டியில் 3-2,  2013ல் 3 போட்டியில் 2-1 எனவும் இந்தியா தோல்வியை தழுவியிருந்த நிலையில் தற்போது கோஹ்லி படை தென்ஆப்ரிக்க மண்ணில் தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்திருக்கிறது. இந்திய அணியின் இந்த சாதனையை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி உள்ளனர்.




முதல் இடத்தை தக்க வைத்தது:
தென்ஆப்ரிக்க தொடருக்கு முன் ஐசிசி ஒன்டே தரவரிசையில் இந்தியா 119 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், தென்ஆப்ரிக்கா 120 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் இருந்தது. முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா 121 புள்ளியுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது.

தற்போது 4-1 என தென்ஆப்ரிக்க தொடரை கைப்பற்றியதன் மூலம் இ்ந்தியாவின் புள்ளி 122 ஆக அதிகரித்துள்ளது. கடைசி போட்டியில் தோற்றாலும் இந்தியாவின் முதல் இடத்திற்கு ஆபத்து இல்லை.

அடுத்த சில மாதங்கள் வேறு எந்த அணியும் முதல் இடத்திற்கு வர வாய்ப்பு இல்லை. தென்ஆப்ரிக்கா 118 புள்ளியுடன் 2வது இடத்திலும் இங்கிலாந்து 116, நியூசிலாந்து 115, ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.



தொடர்ச்சியாக 9 ஒருநாள் தொடர்களில் வெற்றி:
இந்திய அணி  கடந்த 2016ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சி இரு அணிகளுக்கு இடையிலான  9 ஒருநாள் போட்டி தொடர்களை கைப்பற்றி இருக்கிறது. 2015-16ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5போட்டிகள்கொண்ட தொடரை 4-1 என இழந்தது.

அதன் பின்னர் இதுவரை 9 தொடர்களில் ஆடி அனைத்திலும் வென்றுள்ளது.

ஆண்டு    எதிரணி    வெற்றி
2016    ஜிம்பாப்வே    3-0(3)
2016-17    நியூசிலாந்து    3-2(5)
2016-17    இங்கிலாந்து    2-1(3)
2017    வெஸ்ட்இண்டீஸ்    3-1(5)
2017    இலங்கை    5-0(5)
2017-18    ஆஸ்திரேலியா    4-1(5)
2017-18    நியூசிலாந்து    2-1(3)
2017- 18    இலங்கை    2-1 (3)
2017- 18    தென்ஆப்ரிக்கா     4-1(5)

.

மூலக்கதை