முக்கிய வேட்பாளருக்கு தடை எதிரொலி ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் வெற்றி உறுதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
முக்கிய வேட்பாளருக்கு தடை எதிரொலி ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் வெற்றி உறுதி

மாஸ்கோ: ரஷிய அதிபர் விளாதிமிர் புதினின் பதவி காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது. வருகிற 18-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அரசியல் அமைப்பு சட்டப்படி அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பெற வேண்டும். 18ம் தேதி தேர்தலில் எந்த வேட்பாளரும் 50 சதவீத ஓட்டுகளை பெறவில்லை என்றால் 2-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 8-ந் தேதி நடத்தப்படும்.

இதில், முதல்கட்ட தேர்தலில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடுவார்கள்.   2012-ம் ஆண்டு நடந்த தேர்தலில் புதின் 64 சதவீத ஓட்டுகள் பெற்று முதல் சுற்று தேர்தலிலேயே அபார வெற்றி கண்டார்.

இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அவரால் ரஷியாவில் 2024-ம் ஆண்டு வரை ஆதிக்கம் செலுத்த முடியும். புதினுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவல்னி.

தற்போது அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு ரஷியாவின் தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது. ஒரு கிரிமினல் வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதை காரணம் காட்டி அதிபர் தேர்தலில் அவருடைய வேட்பு மனுவை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.

இதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகிவிட்டது. இது அரசியல் சூழ்ச்சி என்று அலெக்சி நவல்னி குற்றம்சாட்டி உள்ளார்.

முக்கிய எதிரி களத்தில் இல்லாத நிலையில் புதின் அதிபர் தேர்தலில் முன்னணி வேட்பாளராக உள்ளார்.

இவரை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சியின் பிரபல கோடீசுவரர் பாவெல் குருடினின், பிரபல டி. வி. நடிகர் கெனியா சோப்சாக், பழமைவாத கட்சியின் விளாடிமிர் ஷிரிநோவ்ஸ்கி, லிபரல் கட்சியின் கிரிகோரி யவலின்ஸ்கி, கோடீசுவரர் போரிஸ் டிடோவ், தேசியவாத கட்சியின் செர்ஜி பபுரின், போட்டி கம்யூனிஸ்ட் தலைவர் மாக்சிம் சுரைகின் என 7 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கெனியா சோப்சாக், கிரிகோரி யவலின்ஸ்கி ஆகிய இருவரும் புதினுக்கு ஓரளவு சவாலை அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்கள் இருவரையும் தவிர புதினை எதிர்த்து போட்டியிடும் மற்ற வேட்பாளர்களுக்கு 3 முதல் 5 சதவீத ஓட்டுகள் கிடைப்பதே அரிது என்று கூறப்படுகிறது. இதனால் புதின் மீண்டும் ரஷிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

.

மூலக்கதை