திருச்சி ரோட்டில் 3 பாலங்கள் கட்டும் திட்டம்; கருத்து கேட்க வேண்டுமென மக்கள் விருப்பம்!

தினமலர்  தினமலர்
திருச்சி ரோட்டில் 3 பாலங்கள் கட்டும் திட்டம்; கருத்து கேட்க வேண்டுமென மக்கள் விருப்பம்!

கோவையில், போக்கு வரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, முதல்வர் அறிவித்துள்ள மூன்று பாலங்களின் வடிவமைப்பை, மக்களிடம் கருத்துக் கேட்டு தயார் செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கோவை மாநகரில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கு, புறவழிச்சாலை, பாலங்கள், மக்கள் போக்குவரத்து திட்டங்கள் என பலவிதமான கோரிக்கைகளை, மத்திய, மாநில அரசுகளிடம் இங்குள்ள தொழில் அமைப்புகள் முன் வைத்து வருகின்றன. அதை ஏற்று, இரு அரசுகளும் திட்டங்களையும் அறிவிக்கின்றன; ஆனால், அவை செயல்பாட்டுக்கு வருவதில் தான், அசாத்தியமான தாமதம் ஏற்பட்டு வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள், இன்று வரை துவக்கப்படவே இல்லை. இந்நிலையில், கடந்த வாரத்தில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில், கோவை-திருச்சி ரோட்டில், சுங்கம், ராமநாதபுரம் மற்றும் சிங்காநல்லுார் சந்திப்புகளில், பாலங்கள் கட்டப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, கோவை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதேநேரத்தில், இந்த பாலம் எப்போது, எப்படி கட்டப்படும் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. ஏனெனில், 2011 ஜூனில், கலெக்டர்கள் மாநாட்டில் அன்றைய முதல்வர் ஜெ., அறிவித்த மேற்கு புறவழிச்சாலை, உக்கடம்-ஆத்துப்பாலம் உயர் மட்ட மேம்பாலம் ஆகிய இரு பணிகளும், இன்று வரை துவக்கப்படவில்லை. என்ன காரணம் கூறினாலும், ஏழாண்டுகளாக தமிழகத்தை ஆண்ட அ.தி.மு.க., அரசின் மெத்தனமே, இதற்குக் காரணமென்பதே, அப்பட்டமான உண்மை.

அடுத்ததாக, முந்தைய தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட காந்திபுரம் மேம்பாலத்தை, கடந்த ஆண்டில் இந்த அரசு கட்டி முடித்தாலும், அந்த பாலத்தின் வடிவமைப்பு, மக்களிடம் கடும் அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக, இந்த மூன்று பாலங்களின் வடிவமைப்பு குறித்த விவாதங்களும் இப்போதே துவங்கி விட்டன.

அவிநாசி ரோட்டில் அமைப்பதைப் போல, ஒரே உயர் மட்ட மேம்பாலமாக கட்டப்படுமா அல்லது மூன்று சந்திப்புகளிலும் தனித்தனி பாலங்கள் கட்டப்படுமா என்ற குழப்பம், மாவட்ட நிர்வாகத்துக்கே உள்ளது. இவற்றில், சுங்கம் சந்திப்பு, ஏழு சாலைகளின் சந்திப்பாகும். மற்ற இரு இடங்களிலும், தலா நான்கு சாலைகள் இணைகின்றன. எனவே, இம்முறையாவது, பாலங்களுக்கான திட்ட அறிக்கை, வரைபடம் தயாரித்து, மக்களின் பார்வைக்கு வைத்து, கருத்துக் கேட்பது, மிகமிக அவசியம்.

அதற்கும் கேட்கவேண்டும்!
திருச்சி ரோடு, என்.எச்., என்பதால், இந்த பாலப்பணிகளை தேசிய நெடுஞ்சாலைத் துறையும், அவிநாசி ரோடு மேம்பாலத்தை, மாநில நெடுஞ்சாலைத்துறையும் மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. இவ்விரு பாலங்களின் வடிவமைப்பு குறித்தும், மக்களிடம் கருத்துக் கேட்ட பின்பே, இறுதி வடிவம் தர வேண்டுமென்பதே, இங்குள்ள தொழில் அமைப்புகளின் கோரிக்கை.


-நமது நிருபர்-

மூலக்கதை